முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவன முறைகேடு விவகாரத்தில் சிக்கிய கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் வெளிநாடு தப்பிச் செல்லாத வகையில் அவருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள லுக்அவுட் நோட்டீசையும் சுப்ரீம் கோர்ட் தொடர்ந்து நீட்டித்து வருகிறது.
இதற்கிடையில், கடந்த முறை லண்டன் சென்ற போது கார்த்தி சிதம்பரம், தனது வெளிநாட்டு வங்கி கணக்குகளை மூடி விட்டதாகவும், அந்த கணக்குகளில் இருந்த பணம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் சிபிஐ தரப்பில் குற்றம்சாட்டியது.
இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் ரூ.90 லட்சம் நிரந்தர வைப்பு கணக்கு கொண்ட வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
கார்த்தி சிதம்பரம் தனது சொத்துக்களை விற்க முயற்சித்ததாகவும், அதனால் அவரது சொத்துக்களும், வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.