செப்டம்பர் 1-ம் தேதி முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்திருந்தது.
அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 3 மாத சிறை தண்டனை, அல்லது ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி உரிமையாளர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மோட்டார் வாகன சட்டப் பிரிவு 139-ன் படி ஓட்டுனர்கள் வாகனங்களை இயக்கும் போது, தங்களுடைய அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.
மேலும் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் எனவும் நீதிமன்றம் தெரிவித்து ., செப்டம்பர் 4-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
இதனை எதிர்த்து லாரி உரிமையாளர் சங்க தலைவர் சுகுமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி முன் விசாரணைக்கு வந்தது. அசல் ஓட்டுநர் உரிமம் கொண்டு வர மறந்தால் 3 மாத சிறை தண்டனை தேவையற்றது என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மறந்து அசல் ஓட்டுநர் உரிமம் கொண்டு வராதவர்களுக்கு அபராதம் போதும் என்று ஓட்டுநர் உரிமம் தொடர்பான வழக்கை விசாரித்த போது இவ்வாறு தெரிவித்தார்.
அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களுக்கும், எடுத்து வராதவர்களுக்கும் வேறுபாடு உண்டு என்று தெரிவித்த தலைமை நீதிபதி, நகல் பாஸ்போர்ட் மூலம் வெளிநாடுகளுக்கு செல்ல முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். பாஸ்போர்ட் போன்றது தான் அசல் ஓட்டுநர் உரிமம் என்றும் நீதிபதி விளக்கம் அளித்தார்.