ஒரு லட்சம் ரூபாய் வரை விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறி உ.பி.விவசாயிகளுக்கு 36 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பு பிஜேபி கட்சியின் யோகி அரசாங்கம் செய்தது என்பது தெரிந்ததே.
மதுரா மாவட்டத்தைச் சேர்ந்த அடிங் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சிறிய வீடும், 5 ஏக்கர் நிலமும் உள்ள சர்மா. விவசாயத்திற்காக பஞ்சாப் நேஷனல் வங்கியில் 1 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் கடனை செலுத்த முடியவில்லை.
இந்த நிலையில் முதல்வர் யோகி யின் அறிவிப்பு பெரும் வரப்பிரசாதமாக சர்மா உள்ளிட்ட விவசாயிகளுக்கு அமைந்தது.
ஒரு லட்சம் ரூபாய் கடன் தள்ளுபடி ஆகும் என்று எதிர்பார்த்திருந்த விவசாயி சர்மாவுக்கு, பஞ்சாப் நேஷனல் வங்கியிலிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் அவர் வாங்கியுள்ள விவசாயக்கடன் 1 லட்சத்து 55 ஆயிரம் ரூபாயில் ஒரு ரூபாய் தள்ளுபடி செய்யப்படுவதாக கூறப்பட்டிருந்தது.
ஆறு மாதங்கள் காத்திருந்த சர்மாவுக்கு 1 ரூபாய்தான் தள்ளுபடி என்ற செய்தி வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த செய்தியை அறிந்த மீடியாக்கள் சர்மாவின் வீட்டை முற்றுகையிட்டன. அவர்களுக்கு டீ, ஸ்நாக்ஸ் வாங்கிக் கொடுக்கவே 100 ரூபாய்க்கு மேல் ஆகிவிட்டது என்று வருத்தத்துடன் சர்மாசொல்கிறார்.
பஞ்சாப் நேஷனல் வங்கி மேலாளரிடம் பேசும்போது, ஒரே வங்கியில் இரண்டு கணக்கு வைத்திருந்தால் இதுபோல நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறினார். ஆனால், அப்படி எதுவும் கணக்கு இல்லை என்று சர்மா சொன்னார். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த மதுரா மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இது போன்ற ஆயிரத்துக்கு மேற்பட்ட பேருக்கு 1 பைசாவுக்கு மேலாக 40 பைசா வரை தள்ளுபடி பெற்ற விவசாயிகள் நிறைய இருக்கிறார்கள் என்று வருத்தமுடன் சொல்கிறார்கள் உத்திர பிரதேச விவசாயி பெருமக்கள்.