புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே நெடுவாசலில் போராட்டம் தொடங்கி விட்டது.
ஊர் மக்கள் ஒன்றுகூடி, “ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு கூட்டியக்கம்” என்ற பெயரில் இயக்கத்தை கட்டமைத்து தொடர்ந்து அறவழியில் போராடி வருகிறார்கள். முதல் கட்டமாக பிப்ரவரி 26 -ம் தேதி நடந்த போராட்டத்தில் கிராம மக்கள், மாணவர்கள் பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி பிப்ரவரி 26-ம் தேதி அன்று புதுக்கோட்டையிலும் அறவழிப் போராட்டம் நடந்தது.
முதல் கட்டப்போராட்டம் கைவிடப்பட்ட நிலையில் 2-ம் கட்ட போராட்டத்தை கடந்த ஏப்ரல் 12-ம் தேதி துவக்கினர். தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர். 154வது நாளான இன்றும் போராட்டம் நடந்தது. விவசாயிகள், அப்பகுதி பெண்கள், விவசாயிகள் திரண்டு நாடியம்மன் கோயில் திடலில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான பதாகைகளை கைகளில் ஏந்திக்கொண்டும், இத்திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
154 நாட்கள் முடிந்து விட்ட நிலையில் இது வரை மத்திய அரசு, மாநில அரசு, மாவட்ட நிர்வாகம், மாடுகள், குப்பைத் தொட்டி, வேற்று கிரக வாசிகள் என்று அனைவரிடமும் மனு கொடுத்து விட்டார்கள். ஆனால் ஒரு புரோஜனமும் இல்லை. இதற்கு மேல் யாரிடம் முறையிடுவது என்று தெரியாமல் கடவுளிடம் மனு கொடுத்துள்ளார்கள். 'கடவுளே நீயாவது எங்கள் விவசாய நிலங்களை காப்பாற்று, எங்களை வாழ விடு!' என்று விவசாயிகள் கதறுகின்றனர்.
100 நாட்கள் பணம் வாங்கி கொண்டு ஒரு வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்து BigBossTamil நிகழ்ச்சிக்கு கிடைக்கும் மரியாதையும், ஈர்ப்பும், 154 நாட்களாக வாழ்வாதாரத்திற்காக வீதியில் போராடிக் கொண்டிருக்கும் நெடுவாசல் விவசாயிகள் போராட்டத்திற்கு கிடைக்கவில்லை என்றும் அவர்கள் கொந்தளிக்கின்றனர்.