கரீம் நகர் மாவட்டம் வேமுலவாடா தொகுதி எம்.எல்.ஏ-வாக தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதிக் கட்சியைச் சேர்ந்த, ரமேஷ் சென்னாமெனே என்பவர் மூன்று முறை எம்.எல்.ஏ-வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரமேஷின் தந்தை ராஜேஷ்வர ராவ், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 5 முறை எம்.எல்.ஏ-வாக இருந்தவர்.
2009-ம் ஆண்டு, ஒருங்கிணைந்த ஆந்திராவில் தெலுங்கு தேசம் சார்பில் தேர்தலில் போட்டியிட்டார். பின்னர், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியில் இணைந்தார். 2010-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தல் இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் எடி ஸ்ரீநிவாஸ் என்பவர், போலிச் சான்றிதழ் கொடுத்து ரமேஷ் இந்தியக் குடியுரிமை பெற்றிருப்பதாக ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
நீதிமன்றம், ரமேஷின் வெற்றி செல்லாது என அறிவித்தது. ஆந்திர உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றத்தில் ரமேஷ் தடை பெற்றார். தடைக் காலத்திலேயே 2014-ம் ஆண்டு மீண்டும் ஒருமுறை அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம், ரமேஷின் குடியுரிமை குறித்து விசாரணைசெய்து அறிக்கை அளிக்க உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
விசாரணையில் ரமேஷிடமிருந்து ஜெர்மன் பாஸ்போர்ட் கைப்பற்றப்பட்டது. ஜெர்மன் குடியுரிமை வைத்திருப்பதும் தெரியவந்தது. நீதிமன்றம் அவரின் இந்தியக் குடியுரிமையைப் பறிக்க, உள்துறை அமைச்சகத்துக்குப் பரிந்துரைத்துள்ளது.
ரமேஷ் மாமனார் பிஜேபி கட்சியில் முக்கிய பிரமுகர் முன்னாள் மந்திரி மற்றும் இந்நாள் தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் தான். இந்தியக் குடியுரிமையை இழந்தவர், தேர்தலில் போட்டியிடும் தகுதி இழந்தவராகிறார். எம்.எல்.ஏ-வாக இருக்கும் தகுதியையும் இழக்கிறார். மருமகனின் தகுதி நீக்கம் மாமனார் ராவ் விற்கு பெரும் அவமான தலைவலியாக வந்து உள்ளது என்கிறது அவரின் நெருங்கிய குடும்ப வட்டார தகவல் ..