ஏழை மாணவர்கள் கல்விக்காக அகரம் தொண்டு நிறுவனம் நடத்தி வருபவரும் பிரபல சிங்கம் பட தொடர் வெற்றிகளை குவித்த நடிகரும் சூர்யா நாளிதழ் ஒன்றுக்கு எழுதிய கட்டுரையின் தொகுப்பின் விவரம்:

Special Correspondent

எங்களுடைய ‘அகரம் ஃபவுண்டேஷன்’ கடந்த 10 ஆண்டுகளாக அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி நலனுக்காகத் தன்னால் இயன்ற பங்களிப்பைச் செய்துவருகிறது. இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களின் விண்ணப்பங்களைச் சரிபார்த்து, நேர்காணல் நடத்தி அவர்களில் 1,943 மாணவர்கள் இப்போது பல்வேறு கல்லூரிகளில் படிக்க அது உதவிவருகிறது. இவர்களில் 49 பேர் மருத்துவ மாணவர்கள்.

இவர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கிராமப்புறங்களிலிருந்து வருபவர்கள். 91% பேர் முதல் தலைமுறையாக பன்னிரண்டாம் வகுப்பை முடிப்பவர்கள். மாத வருமானம் ரூ. 2,000 நிரந்தரமாகக் கிடைக்காத பெற்றோர்களின் பிள்ளைகள்தான் இவர்களில் அதிகம். பதின்பருவ வளர்ச்சிக்குத் தேவையான நல்ல உணவுகூடக் கிடைக்கப் பெறாதவர்கள்.

வீட்டுச் சூழல்தான் இப்படி என்றால், கல்விச் சூழல் இதைவிட மோசமாக இருக்கும். போதிய ஆசிரியர்கள் இல்லாமல், அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகளில் படித்து நல்ல மதிப்பெண்கள் எடுத்தவர்கள். பெரும்பாலான மாணவர்கள் விடுமுறை நாட்களில் பகுதிநேரக் கூலி வேலைக்குச் செல்பவர்கள். இந்த அனுபவத்திலிருந்து கிடைத்த படிப்பினைகளிலிருந்தே இதை எழுதுகிறேன். நாங்கள் நடத்தும் நேர்காணலில் பங்கேற்பதற்கான பஸ் செலவுக்கான சில நூறு ரூபாய் பணம்கூட அவர்களில் பலருக்கு இயலாத காரியம். ஒவ்வொரு வருடமும் இப்படிப்பட்ட பல மாணவர்களை நான் பார்க்கிறேன்.

லட்சக்கணக்கான ரூபாய் பணம் செலுத்தி, சிறந்த பள்ளியில் படித்து, தனிப் பயிற்சிகள் மேற்கொண்டு, நல்ல வாழ்க்கைத் தரத்தோடு இருக்கும் மாணவர்களுக்கும், இப்படி எந்த வசதி வாய்ப்பும் இல்லாத மாணவர்களுக்கும் ‘ஒரே நாடு; ஒரே தேர்வு’ என்ற பெயரில் ஒரு தேர்வை நுழைப்பது எவ்வளவு பெரிய வன்முறை! நந்தனாரை ‘நெருப்புக்குள் சென்று தூய்மை அடைந்த பிறகு கோயிலுக்குள் வா’ என்று சொன்ன அந்தக் காலத் தீண்டாமைக்கும், ‘நிறையப் பணம் செலவழித்துத் தனி கோச்சிங் எடுத்து ‘நீட்’ போன்ற பல்வேறு நுழைவுத்தேர்வில் வெற்றித் தகுதியை நிரூபித்த பிறகு கல்லூரியில் படிக்க வா!’ என்று சொல்வதற்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது...

நுழைவுத் தேர்வை மத்திய அரசு கொண்டுவரும். மாநில அரசு ‘நுழைவுத் தேர்வு இல்லை’ என்று அறிவிக்கும். நீதி மன்றங்கள் மாணவர்களின் எதிர்காலத்தைக் கவனத்தில் கொள்ளாமல், மத்திய - மாநில அரசுகளின் நிலைப்பாட்டை வைத்துத் தீர்ப்புகள் எழுதும். சொந்தப் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்போதுகூட எவ்விதமான எதிர்வினையும் ஆற்றாமல் மக்கள் இருப்பார்கள்.

இந்த நிலை நீடித்தால் எந்த மாற்றமும் வராது. மாணவர்கள் நலனைப் பாதிக்கும் எந்தச் செயலையும் எதிர்த்து மக்கள் குரல் கொடுக்க வேண்டும். மக்கள் எதிர்ப்பு மட்டுமே இந்த அதிகார மையங்களைக் கட்டுப்படுத்தும்.

இவ்வாறு சூர்யா எழுதி உள்ளார்.