மாணவி அனிதா மரணத்துக்கு நியாயம் கேட்டு நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வேகமாக தமிழகத்தில் எரியத் துவங்கியிருக்கிறது.
கல்லூரி மாணவர்கள் தொடங்கி பள்ளி மாணவர்கள் போராடும் அளவுக்கு சென்ற நிலையில் 2017-2018ம் ஆண்டுக்கு நீட் தேர்வு அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைப்பதாக வேலூர் கிறித்துவ மருத்துவ கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் நுழைந்து எழுப்பிய போரட்ட கோஷம் எல்லா டிவி சேனல்களிலும் வந்து பரப்பை கூட்டியது. அந்த மாணவர்களை போலீஸ் கைது செய்த போது "ஓ பன்னிர் செல்வம் வரலாம் நாங்கள் வர கூடாதா " என்ற கேள்வி போலீசாரை திகைக்க வைத்தது...
இதன் இடையே தமிழகத்தில் கல்வித்திட்டத்தையே அழித்தொழிக்கும் நீட் என்று கூறி அநீதியான தேர்வு முறைக்கு எதிராக விழுப்புரம் மாவட்டம் ஓலக்கூர் அருகே உள்ள வைரபுரம் அரசு நடுநிலைப் பள்ளி, இள நிலை ஆசிரியர் சபரிமாலா ஜெயகாந்தன் தன் ஆசிரியர் பணியையே ராஜிநாமா செய்துள்ளார். அவர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு எழுதியுள்ள கடிதத்தில் :
"நான் 2002 முதல் ஆசிரியராக தமிழக கல்வித்துறையில் பணியாற்றி வருகிறேன். மாணவர்களுக்கான என் வாழ்வை அர்ப்பணித்து பல மாநில சாதனையாளர்களை உருவாக்கி ஏற்றத்தாழ்வற்ற சமூகத்தை உருவாதற்காகவே என் வாழ்வை அர்ப்பணித்துள்ளேன் . மாணவி அனிதாவின் மரணத்தை கல்வி எழுச்சி கொள்ள வேண்டிய தருணமாக உணர்ந்தேன். ஒரே கல்வி இல்லாமல் ஒரு தேர்வு எப்படி நியாயமாகும்? இந்த கோரிக்கையை வலியுறுத்தி 6-ம் தேதி உண்ணாவிரதம் இருந்தேன். ஆனால் அனுமதியின்றி உண்ணாவிரதம் இருக்கக் கூடாது என்றார்கள். சம்பளத்திற்காக ஆசிரியர்கள் போராடும் போது சமத்துவம் கொண்ட கல்விக்காக ஒரு ஆசிரியர் போராடக் கூடாது என்று சொல்வது வேதனை தருகிறது”
என்று அவர் தனது ராஜிநாமா கடிதத்தில் தெரிவித்த கருத்து நீட் எதிர்ப்பு போராட்டத்தின் வடிவத்தை மாற்றும் என்றும் அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர்