அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரில் வசித்து வரும் இந்திய தம்பதி வெஸ்லி மாத்யூஸ்–சினி மாத்யூஸ்.
இவர்கள் இந்தியாவில் இருந்து ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். 3 வயதான அக்குழந்தையின் பெயர் ஷெரீன். கடந்த 7–ந்தேதி, ஷெரீனை காணவில்லை. இதுதொடர்பாக ரிச்சர்ட்சன் போலீசில் வெஸ்லி புகார் செய்தார்.
அதன்பேரில், சிறுமிக்கு ஆபத்து உண்டாக்கும் வகையில் செயல்பட்டதாக அவர் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை, வெஸ்லி வீட்டு அருகே ஒரு சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அது, ஷெரீனாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்நிலையில், வெஸ்லி மீண்டும் கைது செய்யப்பட்டார். அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சம்பவத்தன்று, ஷெரீன் பால் குடிக்க மறுத்ததால், வலுக்கட்டாயமாக ஊட்டியபோது இருமல் ஏற்பட்டு மூச்சுத்திணறியதாகவும், நாடித்துடிப்பு இல்லாததால், அது இறந்து விட்டதாக கருதி, உடலை அப்புறப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.