தமிழக பொதுப்பணித்துறையில் கட்டுமான பணிகளுக்கு உண்டாகும் செலவை தயாரித்த பிறகு அதற்கான நிதி ஒதுக்கப்படுகிறது. இவ்வாறு கட்டுமானத்திற்கு தயாரிக்கப்படும் செலவு தொகையை அடிப்படையாக வைத்தே டெண்டர் விடப்படுகிறது.
இந்நிலையில், இந்தாண்டுக்கான கட்டுமான பொருட்களின் விலையை அடிப்படையாக வைத்து 2017-18க்கான புதிய விலைப்பட்டியலை தமிழக அரசு வெளியிட்டது. இதில் கட்டுமான பொருட்களுக்கு கடந்தாண்டை காட்டிலும் 4 சதவீதம் விலை உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டது. இந்த வரி காரணமாக கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இது, அரசு கட்டுமான பொருட்களுக்கு நிர்ணயித்துள்ள விலையை விட அதிகம் உள்ளது.
இந்த நிலையில், மூன்று மாதங்களாக முடங்கி கிடந்த அரசு கட்டுமான பணிகளுக்கு புதிய விலை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் அனைத்து கட்டுமான பொருட்களுக்கும் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அந்த அடிப்படை விலையுடன், ஜிஎஸ்டி வரியையும் சேர்த்து கட்டுமான பொருட்களுக்கு விலை நிர்ணயிக்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. அதாவது, ஜிஎஸ்டி கவுன்சலில் கட்டுமான பொருட்களின் வரி விகிதத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், அப்போதைய நிலைமைக்கு ஏற்ப விலை நிர்ணயிக்கலாம்.
இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை, உள்ளாட்சி துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளுக்கு பொதுப்பணித்துறை மூலம் புதிய விலை பட்டியல் குறித்து அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார் என்கிறார் பொதுப்பணித்துறை அதிகாரி .. சோர்ந்து இருக்கும் காண்ட்ராக்ட் வணிகத்தில் இந்த அறிவிப்பு மாற்றம் வருமா என்பதை அந்த விலை பட்டியலை பார்த்த பின்னரே தெரிய வரும் என்கிறார்கள் அரசு பணி காண்ட்ராக்ட் எடுக்கும் தொழில் முனைவர்கள்.