நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலே கந்துவட்டி கொடுமை காரணமாக இசக்கிமுத்து, அவரது மனைவி சுப்புலட்சுமி, 5 வயது மகள் மற்றும் 1 1/2 வயது குழந்தை ஆகியோர் தீக்குளித்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதில் இசக்கிமுத்துவை தவிர மற்ற 3 பேரும் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் கந்துவட்டி கொடுமை சம்மந்தமாக கலையநல்லூர் அருகே உள்ள காசிதர்மத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி, அவரது கணவர் தலவாய்ராஜன் ஆகிய 2 பேரையும் தமிழ்நாடு கந்துவட்டி தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட முத்துலட்சுமிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு மீண்டும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். வழக்கு சம்மந்தமாக முத்துலட்சுமி மாமனார் காலி என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கந்துவட்டி கொடுமைக்கு எதிராக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.
நேரடியாக வைகோ, திருமாவளவன், அமீத் அன்சாரி உள்ளிட்ட பல தலைவர்கள் மருத்துவமனையில் வந்து கண்டனங்களை பதிவு செய்துவிட்டு போன நிலையில், கந்துவட்டியை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து நெல்லை மாநகரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடைபெற உள்ளது.
கந்தவட்டி தொடர்பாக இவர்கள் 6 முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும், மனு மீதான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததை கண்டித்து நடக்கும் போராட்டம் முக்கியத்துவம் பெற்றால் இதற்கு காரணமாக அரசு ஊழியர்களும், காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இன்று இறந்த சுப்புலட்சுமி மற்றும் 2 குழந்தைகள் ஆகியோர்களின் உடல்கள் நெல்லை அரசு மருத்து கல்லூரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களது சொந்த ஊரான காசிதர்மத்திற்கு எடுத்துச் செல்லப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.