கந்துவட்டிக் கொடுமையால் இசக்கிமுத்து என்பவர் தன் இரண்டு பெண் குழந்தைகளுடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள்ளேயே தீக்குளித்த சம்பவம் இந்தியா முழுவதும் #NellaiFamilyAblaze என்ற ஹாஷ்டாகில்பேரலைகளை ஏற்படுத்தி வருகிறது.
கந்துவட்டிக் கொடுமை தொடர்பாக இசக்கிமுத்து குடும்பத்தினர் 5 முறை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் புகார் மனு அளித்ததாகச் சொல்கிறார்கள். ஆனால் நடவடிக்கை எடுக்காத பட்சத்திலேயே அவர் இவ்வாறு செய்ததாகத் தெரிகிறது.
சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளதையே நெல்லை தீக்குளிப்பு சம்பவம் காட்டுகிறது என்று எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் ஆனால் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தன்னிடம் மனு கொடுக்கும் முன்பே இசக்கிமுத்து குடும்பத்தினர் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டனர்” என்கிறார்.
ஆட்சியர், காவல்கண்காணிப்பாளர், அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் காவல்த்துறை கந்துவட்டிக்கும்பலுக்கு ஆதரவாக இருந்ததன் காரணமாக இந்த கொடூர மரணம் நிகழ்ந்து உள்ளது என்றார்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் கந்துவட்டி கொடுமையால் 47 பேர் தற்கொலை செய்துள்ளனர் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த இசக்கிமுத்துவை சந்தித்து ஆறுதல் தெரிவித்தப்பின்னர் இதனை கூறியுள்ளார்.