இணையத்தில் மெர்சல் படத்தை பார்த்ததாக கூறிய எச். ராஜாவுக்கு, விஷால் கண்டனம் தெரிவித்திருந்தார். தனது செயலுக்கு எச். ராஜா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விஷால் வலியுறுத்தினார்.
திருட்டுத்தனமாக படத்தை பார்த்ததாக கட்சி பொறுப்பில் இருப்பவர் பொதுவெளியில் கூறியது வேதனை அளிக்கிறது. மக்கள் அறிந்த ஒரு தலைவராக இருந்துகொண்டு வெட்கமே இல்லாமல் எப்படி இப்படி திருட்டு வீடியோவை ஆதரிக்கிறீர்கள் என்றும் திருட்டு விசிடி குற்றத்தை அரசுகள் சட்டபூர்வமாக ஆகிவிட்டதாக என்றும் எச். ராஜாவுக்கு விஷால் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் சென்னை வடபழனியில் உள்ள நடிகர் விஷால் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும் அவரது தயாரிப்பு அலுவலகமான விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனத்திலும் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தின் ஜிஎஸ்டி முறையாக செலுத்தப்பட்டதா என ஆய்வு நடத்தி வருகின்றனர். சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக விசாரணை நீடிப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. அதிகாரிகள் டி.பி.நாகேந்திரகுமார், ராஜசேகர் உள்ளிட்டோர் தலைமையில் சோதனை நடைபெறுகிறது. அதிகாரிகள் கேட்டதன் பேரில் விஷால் தரப்பில் சரிபார்க்க ஆவணங்கள் வழங்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.
திருட்டு விசிடியில் படம் பார்த்த பிஜேபி பொது செயலாளர் ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று நடிகர் சங்க தலைவர் மற்றும் தயாரிப்பு சங்க தலைவர் விஷால் கூறிய நிலையில் இந்த ரெய்டு அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்படுவதாக விஷால் தரப்பில் தெரிவித்தனர்.
இந்தியாவிலே ஜிஎஸ்டி தொடர்பாக நடைபெறும் முதல் ரெய்டு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.