நடிகர் விஜய் நடித்த மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்து வசனங்கள் இடம்பெற்றிருந்தன. இதற்கு பா.ஜ., தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கோர்ட்டில் வழக்கு போடப்போவதாக தமிழிசை கூறியிருந்தார். பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்ளிட்டோர் விஜய்க்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தி, மோடி அவர்களே,சினிமா என்பது தமிழ் கலாசாரத்தின் ஆழமான வெளிப்பாடு. மெர்சல் பட விவகாரத்தில் தலையிட்டு தமிழின் பெருமையை மதிப்பிழக்க செய்ய வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மெர்சல் படம் தணிக்கை செய்யப்பட்டு விட்டது. அதை மீண்டும் தணிக்கை செய்ய வேண்டாம். விமர்சனங்களுக்கு தர்க்க ரீதியாக பதில் அளியுங்கள். விமர்சிப்பவர்களை மவுனம் ஆக்காதீர்கள். பேசும்போதுதான் இந்தியா ஒளிரும் என டுவிட்டரில் கமல் தெரிவித்திருக்கிறார்.
மெர்சலால் சிலருக்கு தூக்கம் போய்விட்டது. காட்சிகளை நீக்கச் சொல்வது பா.ஜ.க.வின் பயத்தை காட்டுகிறது என்று நடிகை குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் மனதில் தோன்றும் எண்ணங்களே திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த காட்சிகளையும் வசனங்களையும் நீக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த காட்சிகளுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது என்று கபாலி படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.
மத்திய அரசை விமர்சிக்கும் வசனங்கள் மெர்சல் படத்தில் இருப்பதால் ஆளும் பா.ஜ.க அரசு மிரட்டுகிறது. பா.ஜ.க சொல்வதை கேட்கும் வகையில்தான் மாநில அரசு செயல்படுகிறது. இந்த விஷயத்தில் மெர்சல் பின் வாங்கக்கூடாது என்கிறார் பருத்தி வீரன் பட இயக்குனர் அமீர்.