தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் எம் பி பி எஸ் படித்த டாக்டர்.சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் விலங்கு நல மருத்துவர்.
மருத்துவ துறையோடு தொடர்புடைய இருவர் அமைச்சராக,மற்றும் செயலராக இருந்தும் தமிழக அரசின் வரலாற்றில் சுகாதாரத்துறை மிக மோசமாக தத்தளித்து கொண்டிருக்கும் காலகட்டமாக இவர்கள் பதவிக்காலம் இருப்பது மிகவும் வேதனை தரும் நிகழ்வு . ஒரு மருத்துவராக மூடநம்பிக்கையை ஒத்த நிலவேம்பு தூக்கி பிடிப்பது வியப்பளிக்கிறது என்று சொல்லும் Lt.Col Dr. பூவண்ணன் கணபதி கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரியில் படித்தவர், 14 வருடமாக இந்திய ராணுவத்தில் மருத்துவராக பணி செய்து ஓய்வு பெற்றவர் .
இவர் பின்வரும் கேள்விகளை நிலவேம்பு விஷயத்தில் தமிழக அரசுக்கு முன் வைக்கிறார் :
டெங்கு நோயை குணப்படுத்தி விடும் என்று எந்தவித அடிப்படை சான்றுகளும் இல்லாமல் நிலவேம்பு எப்படி திடீர் என்று சில ஆண்டுகளாக முன் நிறுத்தப்படுகிறது? .
பல நூறு சித்த மருத்துவ மருந்துகளை விட மிக மிக அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது ? ?
எந்த தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்களால் சரி என்று சான்று தரப்பட்டது,அதன் காலாவதி (expiry) தேதி என்ன?
கட்சிகளும்,நற்பணி இயக்கங்களும், என் ஜி ஒக்களும் ஊரெல்லாம் கலந்து தருவதால் பயன் உண்டா?
அப்படி கலந்து தருவது சரியா ?முன் எச்சரிக்கையாக குடித்தால் பயன் உண்டா?
நிலவேம்பு என்பதனை பொடி செய்து விற்பனை செய்வதற்கான உரிமை யார் யாருக்கு உண்டு?
உண்மையிலேயே சித்த மருத்துவர்கள் தயாரித்த நில வேம்புவா அல்லது கலப்படமா என்பதை கண்டறிய என்னென்ன வழிகள் இருக்கின்றன?
சித்த மருத்துவத்தில் பயன்படுத்தும் எந்த பொடியை வேண்டுமானாலும் வாங்கி அதன் மேலட்டையை மட்டும் நிலவேம்பு என்று மாற்றி கொடுத்தால் கண்டுபிடிக்க முடியுமா ?
திடீர் என்று இந்த ஆண்டு கோடிக்கணக்கான மக்களுக்கு தரும் அளவுக்கு நிலவேம்பு எப்படி தயார் செய்யப்பட்டது?
அதற்கான மூலப்பொருட்களை விற்பனை செய்யும்,பயிர் செய்யும் நிறுவனங்கள் எவை? நிலவேம்பு என்று பாக்கெட் போட்டு விற்று பல மடங்கு லாபம் சம்பாதிக்க கூடிய சூழலை தடுக்க அரசு என்ன செய்திருக்கிறது?
நில வேம்பை தயாரித்து விற்பனை செய்யும் மருத்துவர்களே அதன் அருமைபெருமைகளை எல்லா ஊடகங்களையும் பயன்படுத்தி முன் நிறுத்தி பேசுவது மருத்துவ விதிகளின்படி சரியா?
நிலவேம்பு தயாரித்த,விற்பனை செய்த நிறுவனங்களின் வருவாய் திடீர் என்று உயர்ந்துள்ளதா?
நிலவேம்பு பொடிக்கு எந்தவித பக்கவிளைவுகளும் கிடையாதா? எந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட பொடியாக இருந்தாலும் கெட்டு போகாத அமிர்தமா அது ?
அரசு எந்த நிறுவனங்களிடம் இருந்து நிலவேம்பு எவ்வளவு ரூபாய்க்கு வாங்கியது? அதனை வழங்க எம் பி பி எஸ் படித்த மருத்துவர்களை கட்டாயப்படுத்த அதற்கு அதிகாரம் உண்டா?
இப்படி கொடுப்பதால் நாளை உலகம் முழுவதும் உள்ள மருத்துவ சமூகத்தின் முன் அவர்கள் தலைகுனிந்து நிற்க காரணமாக அரசே இருப்பதை கேள்வி கேட்டால் மிரட்டுவது சுகாதாரத்துறை அமைச்சருக்கு அழகா?
இதற்கு பதில் சொல்ல வேண்டிய அமைச்சர்,இந்த ஆய்வுகளை,தர கட்டுப்பாடுகளை முன் நின்று நடத்த வேண்டிய செயலர் இருவரும் காலம் கடந்தாவது கேள்வி கேட்பவர்கள் மீது பாய்வது விந்தை தான். என்று கூறியுள்ளார்.
நடிகர் கமலஹாசன், பல்வேறு மருத்துவவல்லுநர்கள் நிலவேம்பு சம்பந்தமாக தங்களது சந்தேகத்தை கேட்டுள்ளதால் இதற்கு பதிலை தமிழக மக்களுக்கு தருமா தமிழக அரசு...