மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதியில் அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மரணம் குறித்த ஒவ்வொரு அமைச்சரும் கூறிய விஷயங்கள் சர்ச்சையாக தொடரும் இந்த வேளையில் இதுபோன்றதொரு கடிதம் வெளியாகியிருக்கிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதற்கு மறுநாள் மருத்துவமனையிலிருந்து ஆளுநருக்கு 'பெஸ்ட் விஷஸ்' என்று ஜெயலலிதா தன் கைப்பட எழுதியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மறுநாள் சுயநினைவுடன் இருந்தார் என்று அந்த தகவல்கள் கூறுகின்றன.
மேலும் தமிழக அரசு ஜெ. மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சுயநினைவின்றி இருந்ததாக அப்போலோ மருத்துவமனை அண்மையில் தகவல் வெளியிட்ட நிலையில் தற்போது இந்த தகவல்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
அதாவது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மறுநாள் பொறுப்பு ஆளுநருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் அவரே கையெழுத்திட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் முரணாக உள்ளது. இதில் எது உண்மை என்பது தெரியவில்லை.