முகலாயப்பேரரசரான ஷாஜகானால் 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தாஜ்மகால் ஆக்ராவில் அமைந்துள்ளது.
வெள்ளை நிற மார்பிள் கற்களால் கட்டப்பட்ட இந்த கட்டடம் உலக அதிசயங்களில் ஒன்றாக உள்ளது. இதனால், ஆண்டுதோறும் உள்நாடு,வெளிநாடு என ஏராளமான சுற்றுலாப்பயணிகள் பார்வையிடுகின்றனர்.
இத்தகைய பெருமைக்குரிய தாஜ்மகாலை முன்வைத்து கடந்த சில தினங்களாக பிஜேபி சர்ச்சையைஎழுப்பி வருகிறது.
அண்மையில் உத்தரப்பிரதேசம் மாநில அரசின் சுற்றுலா துறை சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்ட கையேட்டில் தாஜ்மகால் பெயர் இடம்பெறவில்லை. இதற்கு பகுஜன்சமாஜ், சமாஜ்வாடி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இதற்கிடையே, உத்தரப்பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ. சங்கீத் சாம் பேசுகையில், தாஜ்மகால் துரோகிகளால் கட்டப்பட்டது என தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தாஜ்மகால் இந்தியர்களின் இரத்தத்திலும், வியர்வையிலும் கட்டப்பட்டது. தாஜ்மகாலை யார், என்ன காரணத்துக்காக கட்டினர் என்பது பிரச்சினை இல்லை. ஆனாலும் அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை” என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி வினய் கட்டியார் கூறிய கருத்து, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்ற பிரச்சாரத்தை முதன்மையாக எழுப்பி வருபவர்களில் ஒருவரான வினய் கட்டியார் கூறியிருப்பதாவது:- “ தாஜ்மகால் முதலில் இந்து ஆலயமாக இருந்தது. தாஜ்மகாலின் பெயரை தேஜோ மகால் என மாற்றம் செய்ய வேண்டும்.
தாஜ்மகால் கட்டிடத்தில் பல இந்து கடவுள்களின் குறியீடுகள் உள்ளன. உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தாஜ்மகாலுக்கு செல்ல வேண்டும்.
தாஜ்மகாலுக்குள் இந்து மதத்திற்கு உரிய குறியீடுகள் இருப்பதை காண வேண்டும்.இந்துக்கள் சிவபெருமானுக்காக கட்டிய கோவிலை ஷாஜகான் கைப்பற்றிக்கொண்டார். தாஜ்மஹால் வெறும் கல்லறை மட்டும் என்றால், ஏன் இத்தனை அறைகள் கட்ட வேண்டும். நாட்டின் எந்த பகுதியில் உள்ள எந்த கட்டிடத்தையும் உடைக்க தேவையில்லை. தாஜ்மகாலின் பெயரை மட்டும் தேஜோ மகால் என மாற்ற வேண்டும்.
ஆங்கிலேயர்கள் நமது எந்த கட்டிடத்தையும் இடிக்கவில்லை. ஆனால், முகலாயர்கள் அதை செய்தனர்’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளாகவே, ஆர் எஸ் எஸ் ஒரு பிரிவினர், தேஜோ மகால் முகலாய பேரரசரான ஷாஜகானுக்கு பரிசாக வழங்கப்பட்டதாகவும், தனது மனைவி மும்தாஜ் நினைவாக ஷாஜகான் தாஜ்மகாலை கட்டவில்லை என்றும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.