திமுக செயல் தலைவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் செய்தியாளர்களிடம் அளித்த விவரம் :
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி உயிர்பலி அதிகரித்து வருகிறது. இதில் மக்களை காப்பாற்ற அரசு போதிய முன்எச்சரிக்கையை எடுக்கவில்லை.
டெங்கு காய்ச்சலால் சாவு எண்ணிக்கை அதிகரித்து வருவதை மறைக்க சாவு எண்ணிக்கையை குறைத்து பொய்யான தகவலை தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில் மத்திய குழு பார்வையிட வர வேண்டிய அவசியம் இல்லை.
ஏனென்றால் டெங்கு காய்ச்சலுக்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் பேட்டி கொடுத்து விட்டு செல்கிறார்கள். டெங்குக்கு 40 பேர்தான் இறந்திருக்கிறார்கள் என்று இறந்தவர்களை கொச்சை படுத்தி பேசுவது போல் பேசி விட்டு சென்றுள்ளனர். அது வன்மையாக கண்டிக்கத் தக்கது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது எய்ம்ஸ் மருத்துவ குழு எந்த மருத்துவ அறிக்கையையும் தரவில்லையோ அதே போல் இப்போது வந்துள்ள குழுவும் ஒரு வேஸ்ட் ஆன குழுதான்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டெங்குவை கட்டுப்படுத்து வதை விட்டு விட்டு மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து புதுக்கோட்டையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் அரசு விழா நடத்துகிறார். 5 அடிக்கு ஒரு பேனர் வைக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றது. நீண்ட நாள் இந்த ஆட்சி நிலைக்காது.
டெங்குவால் மக்கள் பலியாவதை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் இருக்கிறார். அவர் விஜயபாஸ்கர் இல்லை. ‘குட்கா’ பாஸ்கர். இப்போ ‘டெங்கு’ பாஸ்கரா மாறியிருக்கிறார். குட்கா விவகாரத்தில் விஜயபாஸ்கர் லஞ்சம் பெற்றார் என்று கூறிய தற்காக என் மீது வழக்கு தொடரப்போவதாக ஏற்கனவே அவர் அறிவித்திருந்தார். இப்போது வரை அவர் என் மீது மான நஷ்ட வழக்கு தொடராமல் மவுனமாக இருப்பது ஏன்? குட்கா விவகாரத்தில் அவர் என் மீது மான நஷ்ட வழக்கு தொடர தயாரா என்றார்