தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று காலை 11.25 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக மத்திய அரசின் 7வது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள ஊதிய விகிதங்களின் அடிப்படையில், மாநில அரசின் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதிய விகிதத்தை உயர்த்தி வழங்குவது குறித்து தக்க பரிந்துரைகளை அரசுக்கு அளித்திட ‘அலுவலர் குழு’ அமைத்தது.
அதன்படி, அலுவலர் குழு ஆய்வுகள் மேற்கொண்டு தனது பரிந்துரைகளை கடந்த மாதம் 27ம் தேதி தமிழக அரசுக்கு சமர்ப்பித்தது. இந்த பரிந்துரைகளை தமிழ்நாடு அரசு விரிவாக ஆய்வு செய்து, நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அதனை முழுமையாக ஏற்றுக்கொண்டு, நேற்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2.57 மடங்கு சம்பள உயர்வு அளிக்க முடிவு செய்து அரசு உத்தரவாக வெளியிடப்பட்டது.
அதன்படி, குறைந்தபட்ச ஊதியம் 6,100 ரூபாயிலிருந்து உயர்த்தப்பட்டு 15,700 ரூபாயாகவும் அதிகபட்ச ஊதியம் 77 ஆயிரம் ரூபாயிலிருந்து இரண்டேகால் லட்ச ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல, அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகியவையும் 2.57 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன.
ஓய்வுபெறும்போது வழங்கப்படும் அதிகபட்ச பணத்தின் மதிப்பு 10 லட்ச ரூபாயிலிருந்து 20 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர் ஊதிய விகிதங்களை மாற்றியமைக்க குழு மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6 சதவீத ஊதிய உயர்வு; ஊழியர் சங்கங்கள் அதிருப்தி அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல், சத்துணவுப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், கிராமப் பஞ்சாயத்துச் செயலாளர் ஆகியோரது ஊதியமும் இதேபோல இரண்டரை மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் தொகுப்பூதியம், மதிப்பூதியம், நிலையான ஊதியத்தை பெற்றுவருவோரின் ஊதியமும் 30 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊதிய உயர்வின் காரணமாக தமிழக அரசுக்கு 14,719 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். இந்த ஊதிய உயர்வுக்கு சட்டப் பஞ்சாயத்து இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.மாநில அரசின் வரி வருவாயில் 67 சதவீதம் அளவுக்கு ஊழியர்களின் ஊதியத்திற்கே சென்றுவிடுவதால், வளர்ச்சித் திட்டங்களுக்குச் செலவழிக்க முடியவில்லையென இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.