சென்னை, தி.நகரில் உள்ள, இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா வீட்டில் தங்கினார் சசிகலா . அங்கிருந்து, தினமும் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனை சென்று, கணவரை பார்த்து வந்தார்.
அவரது பரோல் விடுமுறை, இன்று நிறைவு பெறுகிறது. இன்று மாலை, 6:00 மணிக்குள் அவர், சிறைக்குள் செல்ல வேண்டும். எனவே, சென்னையில் இருந்து பெங்களூருக்கு, காரில்செல்கிறார்.
முன்னதாக தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள பூந்தமல்லி எம்.எல்.ஏ ஏழுமலை, திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள உட்கோட்டை கிராமத்துக்கு, ஒரு துவக்க நிகழ்ச்சிக்குச் சென்றுள்ளார்.
நிகழ்ச்சி முடிந்து காரில் திரும்பிக்கொண்டிருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் நைனா கண்ணு என்ற அ.தி.மு.க தொண்டர், ஏழுமலையின் காரை உருட்டுக்கட்டையால் தாக்கி, அதில் கார் கண்ணாடி உடைந்து, ஏழுமலையின் இரு உதடுகளும் கிழிந்தன.
இதைத் தொடர்ந்து, ஏழுமலை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பியோடிய நைனா கண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.
எங்கள் தலைவி சசிகலா பரோல் முடியும் நேரம் பார்த்து கலவரம் உண்டாக்க நடந்த சதி இது என்றும், தினகரன் ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக காவல் துறை வைத்து பழிவாங்கி வரும் எடப்பாடி பழனிசாமியின் அரசு இப்போது நேரடி தாக்குதலில் ஈடுபடுகிறது இதுக்கு பதில் அவர்கள் சொல்லியே ஆக வேண்டும் என்று தினகரன் அணியினர் கோபத்துடன் தெரிவித்தனர்.