குழந்தைகள் உரிமைக்கான ஐ.நா மன்றத்தின் புள்ளிவிவரங்கள் இந்தியாவில் நடக்கும் திருமணங்களில் 43 சதவீதம் குழந்தை திருமணங்கள் என்று கூறுகிறது.

Special Correspondent

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375-இன் படி 18 வயதை விட குறைவான வயதுடைய பெண்ணுடன் பாலுறவு கொள்வது பாலியல் வல்லுறவாகக் கருதப்படும்.

ஆனால், 15 வயதைவிட அதிகமான வயதுள்ள மனைவியிடம் உறவு கொள்வது குற்றமல்ல என்று அதில் ஒரு விதிவிலக்கு இருந்தது. ஓர் அரசு சாரா அமைப்பு தொடுத்த வழக்கில், புதன்கிழமையன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், அந்த விதிவிலக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

சட்டப்படியான திருமண வயதான 18 வயதை அடையாத `மனைவியுடன்' பாலுறவு கொள்வது குற்றம் என்று இந்திய உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பொதுவாக வரவேற்கப்பட்டாலும், அதை நடைமுறைப்படுத்துவது சிக்கலானதாக இருக்கும் என்று கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குழந்தைகள் மீது செலுத்தப்படும் பாலியல் வன்கொடுமையை ஓரளவு தடுக்கும் என்கிறார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அஜீதா.

பாலியல் வன்கொடுமையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தை (POCSO-போக்ஸோ) அமல்படுத்த இந்த தீர்ப்பு பயன்படும் என்கிறார் அவர்.

இந்த நிலையில் தங்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகளை பெண்கள் சொல்ல முன்வருவதற்கு இந்த தீர்ப்பு வலுசேர்க்கும். ஆனால் இதுபோன்ற புகார்களை பேசுவதற்கு அவர்கள் உடனடியாக முன்வருவார்களா என்பதை யோசிக்கவேண்டும். இருந்தாலும் இது ஒரு நல்ல தொடக்கம்,'' என்றார் அஜீதா.

உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்துத் தெரிவித்த தமிழ்நாடு மாநில குழந்தைகள் நல ஆணையர் நிர்மலா, குழந்தை திருமணத்தை தடுக்கும் வலுவான தீர்ப்பு வந்துள்ளது என்றார்.

''குழந்தை திருமணம் நடத்திய பெற்றோர்களிடம் பேசும்போது அவர்கள் குழந்தைகளை குற்றம் சுமத்துவார்கள். காதல் திருமணம் என்பதால் திருமணம் செய்து வைத்ததாக கூறுவார்கள். உண்மையில் அந்த திருமணங்களை அவர்களே நடத்தி வைத்திருப்பார்கள்.இதுபோன்ற சம்பவங்களில், தற்போது வந்துள்ள தீர்ப்பு மாற்றத்தை ஏற்படுத்தும்,'' என்றார் நிர்மலா.

அனால் இந்த தீர்ப்பு புதிதாக எதையும் சொல்லவில்லை என்றே பெண்ணிய செயற்பாட்டாளர் ஓவியா கருதுகிறார்.

''18வயதிற்கு முன்னதாக நடந்த திருமணமே செல்லாது என்ற நிலை இருக்கும்போது, அதில் பாலியல் தொல்லை கொடுக்கும் கணவனுக்கு தண்டனை என்ற தீர்ப்பு புதிய தீர்ப்பு என்று எடுத்துக் கொள்ள முடியாது. உச்சநீதிமன்றம் மீண்டும் சட்டத்திற்கு புறம்பான செல்லாத திருமணத்தில் சிரமப்படும் பெண்களுக்கு உதவவேண்டும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது,'' என்கிறார் ஓவியா.

"சமீபகாலமாக பெண்கள் பருவம் அடையும் வயது 12 என்று அளவில் உள்ளது. இயற்கை ஒரு பெண்ணின் உடலை உறவுக்கு தயாராக்கும்போது அவளது விருப்பத்தை சட்டம்போட்டு தடுப்பதை ஏற்கமுடியாது. விருப்பம் இல்லாமல் நடக்கும் எதுவும் ஏற்புடையது அல்ல'' என்றார் ஓவியா.