டெங்குவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கக்கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் இதுதொடர்பாக பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் முக்கிய எதிர்கட்சிகள் டெங்கு குறித்து கோரிய விவரம் இதோ :
“ஒரே நாளில் பள்ளி மாணவி உள்ளிட்ட 17 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியிருக்கிறார்கள்”, என்ற அதிர்ச்சித் தகவல் இதயத்தை நடுங்க வைக்கிறது. குறிப்பாக முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில், ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி நிவாஷினி, வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி கிருத்திகா, பள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த 1-ம் வகுப்பு மாணவன் சிவகார்த்தி ஆகியோர் அடுத்தடுத்து டெங்கு காய்ச்சலால் மரணம் அடைந்துள்ள கொடுமை நிகழ்ந்துள்ளது.
ஏறக்குறைய 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு ஜுரத்தால் பாதிக்கப்பட்டு, தினமும் ஆங்காங்கே கொத்துக் கொத்தாக மரணங்கள் நிகழ்ந்து வந்தாலும், ‘விழா கொண்டாட்டங்களில்’ மட்டும் முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி கவனம் செலுத்துகிறார் என்றார் ஸ்டாலின் எதிர்கட்சி தலைவர், திமுக
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் யாராவது மர்மக்காய்ச்சல் என்று சிகிச்சைக்காக வந்தால், அவர்களுக்கு எந்த பரிசோதனையும் செய்யவேண்டாம் என்று மறைமுக அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
ஏனென்றால், அது டெங்கு பாதிப்பு என தெரிய வந்தபின் அவர்கள் இறந்துவிட்டால், அதன்மூலம் தமிழகத்திற்கு அவப்பெயர் வந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. இது மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிரானது. இதுவரை மோசமாக இருந்த தமிழகம் தற்பொழுது மிகமோசமாக மாறிவிட்டது.
ஆனால், இதையெல்லாம் சரிசெய்ய முயற்சி எடுக்காத அமைச்சர்கள், அம்மாவின் ஆட்சியில் டெங்கு தமிழகத்திற்குள் வராது என முட்டாள்தனமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்றார் - அன்புமணி ராமதாஸ் எம்பி பமக
இதன் இடையே பல்வேறு மருத்துவர்கள் தமிழக அரசு விளம்பரப்படும் நிலவேம்பு கஷாயம் மட்டுமே டெங்குக்கு தீர்வாகாது. உலக சுகாதார நிறுவனம் உடன் சேர்ந்து தமிழக அரசு டெங்கு ஒழிப்பில் ஈடுபடடுட்டுள்ளதா என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.