அமித் ஷா மகன் மீதான குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் வெளியிட்ட ‘தி வயர்’ டிஜிட்டல் பத்திரிகையின் செய்தியாளர் ரோகினி சிங், ''தான் வெளியிட்ட செய்தி, தான் ஒரு தைரியசாலி என்பதை நிரூபிக்க அல்ல என்றும் உண்மைகளைச் செய்தியாக வெளியிடுவது ஒரு பத்திரிகையாளரின் கடமை'' என்றும் கூறியுள்ளார்.
‘தி வயர்’ பத்திரிகையின் செய்தியாளர் ரோகினி சிங், தனது ட்விட்டர் பதிவில், ‘தி வயர்’ செய்தி இணையதளப் பக்கத்தின் ’தி கோல்டன் டச் ஆஃப் ஜெய் அமித் ஷா’ என்ற தலைப்பைக்கொண்ட அந்தச் செய்தியைப் செய்தி லிங்க் ஒன்றை அதில் இணைத்திருந்தார்.
அதில், 'அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா மட்டுமே பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் நாட்டில் பலனடைந்த ஒரே நபர்' என ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டிருந்தார். ரோகினி சிங், கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் செய்திவெளியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது .
வயர் இதழின் செய்திக்கு மறுப்பு தெரிவித்து, 100 கோடி கேட்டு அவதூறு வழக்குத் தொடரப்போவதாக அமித் ஷா தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, பத்திரிகையாளர் ரோகினி சிங், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் 'ஒரு பத்திரிகையாளர் எப்படியெல்லாம் செயல்பட வேண்டுமென ஒரு புனிதம் நிறைந்த பதிவை நான் இங்கு எழுத வரவில்லை. என்னுடைய தலையாய பணியே உண்மையை வெளிக்கொணருவதும் இன்றைய தேதியில் ஆட்சி பீடத்தில் உள்ள அரசைக் கேள்வி எழுப்புவதும் மட்டுமே. 2011-ம் ஆண்டு ராபர்ட் வதேராவுக்கும் டி.எல்.ஃப்-க்கும் இடையே நடந்த உடன்பாடுகள்குறித்து செய்தி வெளியிட்டபோது, தற்போது சந்தித்த அளவுக்கு எந்தவொரு பின்னடைவையும் நான் சந்திக்கவில்லை. அப்போதெல்லாம் ‘வாட்ஸ் அப், ஃபேஸ் டைம் ஆடியோ’ மட்டுமே என்றில்லை. ஆள் அரவமற்ற இடங்களில் நடக்கும் ரகசிய சந்திப்புகள்போல எல்லாம் இப்போதில்லை. என்னுடைய போன் அழைப்புகளை எல்லாம் ஒரு மூத்த பா.ஜ.க தலைவர் ஒருவர் பதிவுசெய்து வருகிறார் (நல்லது!) இதுபோல அவதூறெல்லாம் இன்று ஆன்லைனில்தானே பரவுகிறது.
எங்களுக்கு எதிராக அதிகாரம் மிக்க நபர்கள் எடுக்கும் ஆயுதங்கள், மிரட்டல்களும் துன்புறுத்தல்களும் மட்டுமே. புகழ்பெற்ற ஒருவர் சொன்னதுபோல, ' செய்தி என்பது ஒருவரால் அடக்கப்பட வேண்டும். மற்றதெல்லாம் செய்திகள் அல்ல வெறும் விளம்பரங்களே'. மற்றவர்களைப் பற்றித் தெரியாது, ஆனால் நான் மேற்சொன்ன விஷயத்தில்தான் கவனம் செலுத்த உள்ளேன். என்னைச் சுற்றி தற்போது வெளியிடப்படும் செய்திகள்போல நான் எழுதுவதைக் காட்டிலும், என் பத்திரிகையாளர் வேலையிலிருந்தே நான் விலகிவிடலாம். என்னிடம் இல்லாத பல பண்புகளை எனக்கிருப்பதுபோல பலரும் சித்தரித்து வருகிறீர்கள். நான் ஒரு ‘தைரியசாலி’ என்பதற்காக எல்லாம் இதுபோன்றதொரு செய்தியை நான் எழுதுவதில்லை. இதழியல் நோக்கத்திற்காகத்தான் எழுதுகிறேனே தவிர, தைரியத்தைக் காட்டுவதற்காக அல்ல' எனக் குறிப்பிட்டுள்ளார்.
வயர் பத்திரிகைக்கு LC மற்றும் Loan க்கு உள்ள வித்தியாசம் தெரியவில்லை என்று RSS ஆதரவாளர் மற்றும் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியின் டீவீட்டுக்கு ஏன் உங்களுக்கு வந்த ரத்தமா என்று அவரை கிண்டல் செய்தது வைரலாகி வருகிறது.