பெங்களூரைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் கனடா நாட்டின் ஒருநாள் கவுரவ தூதராக இருக்கும் போட்டியை அறிவித்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்ட நிலையில் 9 பெண்கள் மட்டும் தகுதிபெற்றனர். அதில் நர்ஸ் ஜெயந்தியும் ஒருவர்.

Special Correspondent

இந்த 9 பேரையும் காணொலி மூலம் நேர்முகம் செய்து, தங்களை பற்றி ஒரு வீடியோ எடுத்து அனுப்பக்கூறி இருந்தனர். அதில் ஜெயந்தி அனுப்பிய வீடியோ சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு தூதராக வாய்ப்பு கிடைத்தது.

சிவகாசி அருகே எதிர்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த 25 வயது ஜெயந்தி சிறு வயதிலேயே தந்தையை இழந்து, தாயின் சொற்ப வருவாயில் படித்து நர்ஸ் பணிக்கு சேர்த்தவர் . தற்போது இவர் விருதுநகர் அருகே கள்ளமநாயக்கர்பட்டி அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார்.

தேர்வை குறித்து நர்ஸ் ஜெயந்தி கூறுகையில், “ கனடா நாட்டின் இந்தியாவுக்கான ஒருநாள் தூதராக நான் தேர்வு செய்யப்பட்ட செய்தி கேட்டதும் மகிழ்ச்சி தாளவில்லை. நான் தேர்ந்தெடுக்கப்படுவேன் என்று நினைக்கவே இல்லை. ஆனால், மிகவும் தீவிரமாக முயற்சி செய்து, எனது வீடியோவை தயார் செய்தேன். நான் தூதராக பதவி ஏற்கும் அந்த மிகப்பெரிய நாளுக்காக காத்திருக்கிறேன். எனக்கு கிடைத்த நர்ஸ் பணி ஏழை மக்களுக்கு சேவை கிடைத்த வாய்ப்பாகும் ’’ என்றார்.

இந்தியாவுக்கான கனடா நாட்டு தூதர் ஜெனிபர் டாபெனி கூறுகையில், “இந்தியாவுக்கான ஒரு நாள் கனடா நாட்டு தூதராக தேர்வு செய்யும் போட்டி கடந்த 6 வாரங்களுக்கு முன் தொடங்கியது. தொடக்கத்தில் காணொலி மூலம் நேர்முகத் தேர்வு வைத்து, பெண்கள் அனுப்பிய வீடியோக்களை ஆய்வு செய்து தேர்வு செய்தோம். இதில் ஜெயந்தியின் வீடியோ சிறப்பாக இருந்தது. அவரின் குடும்ப பின்னணி, கல்வி, வேலை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து அவரை தேர்வு செய்தோம். எப்படி பெண்களை ஈர்ப்பீர்கள் என்ற கேள்விக்கு ஜெயந்தி அளித்த பதிலால் அவரை தேர்வு செய்தோம்’’ எனத் தெரிவித்தார்.

வரும் 11-ந்தேதி நடக்கும் சர்வதேச பெண் குழந்தைகளுக்கான நாளில் ஜெயந்தி பதவி ஏற்கிறார். கனடா நாட்டு தூதர் ஜெனிபர் டாபெனியுடன் சேர்ந்து இரு பள்ளிக்கூடங்களை பார்வையிடும் ஜெயந்தி, அன்று நண்பகலில், பல்வேறு பெண் தொழில்முனைவோர்களுடன் விருந்து உண்கிறார்.