தென்மேற்கு பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் கனமழை பெய்தது. பல மணிநேரம் நீடித்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதுடன் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளிலும் மழை நீர் புகுந்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த எலக்ட்ரானிக் சிட்டி, மாருதி நகர் போன்ற இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடங்கி உள்ளது. இதனிடையே மைசூர் மாவட்டம் பெரியபாட்னா அருகே கனமழையின் போது மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பருவமழை காரணமாக மதுரையில் நேற்று மாலையில் இரண்டு மணி நேரம் கொட்டிய கன மழையில் வரலாறு காணாத வகையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது.
இதன் இடையே இந்த வார இறுதியில் வட கிழக்கு பருவ மழை வருகிற 7-ந்தேதியும், 12-ந்தேதியும் வங்கக் கடலில் 2 புயல்கள் உருவாக வாய்ப்புள்ளது என்றும்., முதலாவது புயல் 11-ந் தேதி வாக்கிலும், 2-வது புயல் 15-ந்தேதியில் இருந்து 20-ந்தேதி வாக்கிலும் கரையை கடக்கும் வாய்ப்பு என்ற செய்தியை பிரபல Tamilnadu weatherman திட்டவட்டமாக மறுத்துள்ளார்.