சென்னையில் உள்ள கொளத்தூர் தொகுதியில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:
குட்கா ஊழலை தொடர்ந்து தற்போது, ஒயர்லெஸ் ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டெங்கு காய்ச்சல் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளை கேட்டறிந்தேன். டெங்கு காய்ச்சலுக்கு, 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அரசு ஒப்புக் கொண்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை, 400 பேர் இறந்து இருக்கலாம் என எங்களுக்கு தகவல் வந்துள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு, 26 பேர் தான் இறந்துள்ளதாக கூறி வருகிறது. அரசு தவறான தகவல்களை பரப்பி வருகிறது.
முன்னதாக தமிழக சுகாதாரத்துறையின் செயல்பாடுகள் குறித்து மருத்துவர்கள் சங்கப் பொதுச்செயலாளர் ஜி.ஆர். ரவீந்திரநாத்திடம் பேசியபோது தெரிவித்த பகீர் தகவல் விவரம் :
"தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் மக்கள் தண்ணீரைச் சேமித்துவைக்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக, தேக்கி வைக்கப்படும் நன்னீரில் எ.டி.எஸ் வகை கொசுக்களின் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தவகை கொசுக்கள் நல்ல நீரில் மட்டுமே இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. தற்போது, இந்த கொசுக்கள், அனைத்து நீரிலும் இனப்பெருக்கத்தைத் தொடங்கியுள்ளன. கடந்த சில மாதங்களில் மட்டும் தமிழகம் முழுவதும் 4,500 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
இந்நோய்க்கு இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். டெங்குநோய் தாக்குதல் அதிகரித்திருப்பதற்கு, தமிழக அரசின் ஒட்டுமொத்த செயல்பாடின்மையும், சுகாதாரத்துறையின் தோல்வியுமே காரணம் ஆகும். கொசு ஒழிப்புப் பணிக்காக இதுவரை தமிழக அரசு முறையான எந்த நடடிக்கையையும் எடுக்கவில்லை. இந்தப் பணியில் உள்ளவர்கள் ஒப்பந்த அடிப்படையில் உள்ளனர். அதுவும் வருடம் முழுவதும் ஒப்பந்தப் பணியாளர்கள் இல்லை.
டெங்குவை ஏற்படுத்தும் கொசுக்கள் 20 நாள்கள் மட்டுமே உயிர்வாழக் கூடியவையாக இருந்தன. தற்போது அவற்றின் வாழ்நாள் நாற்பது நாள்களாக அதிகரித்துள்ளது. அதனால் இனப்பெருக்கம் அதிகரித்து, வருடம் முழுவதும் கொசுக்கள் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தவகை கொசுக்களைக் கட்டுப்படுத்த நிரந்தரப் பணியாளர்களை சுகாதாரத்துறை பணியமர்த்த வேண்டும். இதுபோன்ற அபாயகரமான நோய்கள் வரும்போது அதற்கான ஆராய்ச்சி எதுவும் இல்லாமல் மிகவும் கண்மூடித்தனமாக தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மற்ற நாடுகளில் இதுபோன்ற நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றனர்.
டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த வேக்சின் (செனோசின்) உள்ளது. அதனை பிரேசில் போன்ற நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. ஆனால், தமிழகத்தில் அவற்றைப் பயன்படுத்தாமல் நிலவேம்புக் குடிநீர் மட்டுமே வழங்கி வருகின்றனர். குறிப்பிட்ட சீசனில் மட்டுமே இருந்த இந்தக் காய்ச்சல் தற்போது அன்றாட நோய்களில் ஒன்றாகச் சேர்ந்துள்ளது. எனவே, டெங்குவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தமிழக அரசு முற்றிலுமாக செயலிழந்து போனதே, இந்நோயால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிக்கக் காரணம்" என்றார்.