அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பெருகி வருகின்றன. இந்த நிலையில், அங்குள்ள லாஸ் வேகாஸ் நகரில் உள்ள ஓட்டலின் திறந்தவெளியில் 1–ந் தேதி இரவு இன்னிசை கச்சேரி நடந்தது. 22 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அதை கண்டுகளித்துக்கொண்டிருந்த போது அமெரிக்காவின் உள்ளூர் நேரப்படி இரவு 10.07 மணிக்கு சற்றும் எதிர்பாராத வகையில், ஸ்டீபன் கிரேக் பாட்டாக் (வயது 64) என்பவர், தானியங்கி துப்பாக்கியால் கூட்டத்தினரை நோக்கி சரமாரியாக சுடத்தொடங்கினார். 10 நிமிடங்களுக்கும் மேலாக அவர் சுட்டுக்கொண்டிருந்தார். இதில் 59 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். 527 பேர் காயம் அடைந்தனர்.

Special Correspondent

இதுபற்றி லாஸ் வேகாஸ் நகர மேயர் கரோலின் குட்மேன் கருத்து தெரிவிக்கையில், ‘‘என்னை பொறுத்தமட்டில் இந்த தாக்குதல் வெறுப்புணர்வின் அடிப்படையில் நடத்தப்பட்ட பைத்தியத்தின் வேலை என்றுதான் சொல்வேன்’’ என குறிப்பிட்டார்.

இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய ஸ்டீபன் பாட்டாக்கும் உயிரிழந்தார். அவர் அதிரடிப்போலீசார் அங்கு வந்துசேர்வதற்கு முன்னால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டு விட்டார். அதை தொடர்ந்து போலீசார் புலன் விசாரணையில் இறங்கி உள்ளனர். இதில் தாக்குதல் நடத்தி விட்டு, தற்கொலை செய்து கொண்டுள்ள ஸ்டீபன் பாட்டாக் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. அவர், நெவாடா மாகாணம் மெஸ்குயிட் என்ற இடத்தை சேர்ந்தவர். ஓய்வு பெற்ற கணக்காளர்.

அவர் தீவிரமான சூதாட்டக்காரர், பணக்காரர். அவர் 34 துப்பாக்கிகளை குவித்து வைத்துள்ளார். அவரது வீட்டில் இருந்து 18 துப்பாக்கிகளும், தாக்குதல் நடத்தப்பட்ட ஓட்டலில் அவர் தங்கி இருந்த அறையில் இருந்து 16 துப்பாக்கிகளையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

இதன் இடையே முஸ்லீம் ஆக மதம் மாறியவர் ஸ்டீபன் என்று கூறிய லாஸ் வேகாஸ் தாக்குதலில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றிருந்தாலும்கூட, இதில் சர்வதேச பயங்கரவாத தொடர்பு இல்லை என்று அமெரிக்க மத்திய புலனாய்வு படையினர் கூறுகின்றனர்.

இந்த தாக்குதலை அவர் நடத்தியதின் பின்னணி என்ன என்பது மட்டும் இன்னும் தெரியவரவில்லை. இதில் துப்பு துலங்காமல் போலீசார் திணறுகின்றனர்.