சிவாஜி கணேசன் பிறந்தநாளான இன்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மணிமண்டபத்தை திறந்து வைத்தார். மணிமண்டபத்தில் உள்ள சிவாஜியின் படத்திற்கு துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். விழாவில் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, பெஞ்சமின் கலந்துக் கொண்டனர்.
மணிமண்டபம் திறப்பு விழாவில் சிவாஜி குடும்பத்தினர் ராம்குமார், பிரபு மற்றும் விக்ரம் பிரபு பங்கேற்று உள்ளனர். மணிமண்டப திறப்பு விழாவில் ரஜினி, கமல், நடிகர்கள் ராஜேஷ், விஜயகுமார், நாசர், சரத்குமார், விஷால், ராதிகா, கார்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு உள்ளனர்.
விழாவிற்கு வந்த நடிகர் ரஜினி, கமலை துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கை குலுக்கி வரவேற்றார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் உள்ள ஆந்திர மகிளா சபா அருகில் தமிழக அரசு ரூ.2.80 கோடி செலவில் மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டது. இங்கு சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களின் புகைப்படங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் அவர் இருப்பது போன்ற படங்கள் உள்பட 188 புகைப்படங்கள் வைக்கப்பட்டு உள்ளன.
மெரினா கடற்கரை சாலையில் இருந்து அகற்றப்பட்ட சிவாஜி கணேசன் சிலையும் இந்த மணி மண்டபத்தின் நுழைவு வாயிலில் நிறுவப்பட்டு உள்ளது.
சென்னை அடையாறில் சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் கலந்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேசிய விவரம் :
இப்படித்தான் நடிக்கனும், இப்படித்தான் வசனம் பேசனும், இப்படித்தான் நடக்கனும், என்று இருந்த காலகட்டத்தில், நடிப்பில், வசன உச்சரிப்பில், பாவனையில், எல்லாத்திலும் ஒரு புரட்சியை உண்டாக்கி தமிழ் மக்களை மட்டும் ரசிக்க வைக்காமல், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு ஹீரோவும் இந்த மாதிரி ஒரு நடிகனை இனி பார்க்க முடியாது. அவராக நாம் நடிக்கவும் முடியாது, அப்படி அங்கிகரிக்கப்படுகின்ற ஒரு மகாநடிகன்.
அதற்காக அவருக்கு இப்படி ஒரு மணிமண்டபம் எழுப்பனுமா? எழுப்பினார்களா? சிலை வைத்தார்களா? ஒரு நடிகனாக மட்டும் இருந்திருந்தால் கட்டாயம் அவருக்கு மணிமண்டபம் கட்டியிருக்க மாட்டார்கள். எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் சரி.
இது அரசியல், சினிமா இரண்டும் கலந்த ஒரு விழா. சிவாஜி நடிப்பில் மட்டுமல்ல, அரசியலிலும் பாடம் கற்றுகொடுத்து போயிருக்கிறார். அரசியலில் தனி கட்சி ஆரம்பித்து அவரது தொகுதியிலே அவர் தோற்றுப்போனார். அது அவருக்கு நேர்ந்த அவமானம் இல்லை. அந்த தொகுதி மக்களுக்கு நடந்த அவமானம்.
ஓபிஎஸ் அவர்கள் ரொம்ப அதிர்ஷ்டசாலி, அது பலமுறை நிரூபணம் ஆகியுள்ளது. காலகாலமாக தலைநிமிர்ந்து நிற்கபோகும் இந்த மணிமண்டபத்தை கட்டிய பாக்கியம் அவருக்கு கிடைத்திருக்கிறது.
இந்த மணிமண்டபத்தை கட்டிகொடுத்த அமரர் புரட்சி தலைவி அவர்களுக்கும், அந்த சிலையை உருவாக்கிய கலைஞர் அவர்களுக்கும் திரையுலகம் சார்பில் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.