குஜராத் சட்டசபை பதவிக்காலம் 2018 ஜனவரி 22ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.
182 தொகுதிகள் கொண்ட குஜராத் சட்டப்பேரவையில் மெஜாரிட்டிக்கு 92 இடங்கள் தேவை.சுமார் 20 ஆண்டுகள் தொடர்ச்சியாக குஜராத் ஆட்சி கட்டிலில் பா.ஜனதா இருந்து வருகிறது.
நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்குப்பின் முதல்வர் பதவியை ஆனந்திபென் பட்டேலிடம் ஒப்படைத்துவிட்டு பிரதமர் பதவியை ஏற்றார். அதன்பின் தான் பா.ஜனதாவுக்கு சறுக்கல் ஆரம்பித்துள்ளது.
தொடர் ஆட்சியால் எழுந்த எதிர்ப்பு அலை, பட்டேல் சமூகத்தினரின் போராட்டம், அதனால் துப்பாக்கிச்சூடு, வேலைவாய்ப்பின்மை, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் குஜராத் அரசின் தோல்வி மோடி இல்லாததால் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து காங்கிரஸ் இந்த முறை குஜராத்தில் பிஜேபி யை வீழ்த்த முனைப்புடன் இறங்கி உள்ளது .
அமித்ஷா சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவராக இருந்த சங்கர்சிங் வகேலாவை வைத்து காங்கிரசை பிளந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த மாநிலங்களவை தேர்தலில் சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது பட்டேலை வீழ்த்த காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் அமித்ஷா நடத்திய பணபேரம் கட்சிக்கு கூடுதல் கெட்ட பெயரை சம்பாதித்து விட்டது. அனாலும் அகமது வெற்றி பெற்றதை அமித் ஷா மோடியால் இன்னும் ஜீரணிக்க முடியாமல் தவிப்பதாக அக்கட்சி வட்டாரமே கூறுகிறது.
2019 நாடாளுமன்ற தேர்தலை வலுவாக சந்திக்க மோடி திட்டமிட்டு இருந்த போது குஜராத்தில் இருந்து வந்த தகவல்கள் அவருக்கு நலம் அளிக்கவில்லை. எனவே குஜராத்தில் மீண்டும் தனது பிம்பத்தை பலப்படுத்த அடுத்தடுத்து ஒரே மாதத்திற்குள் 3 முறை பயணம் செய்தார்.
அதுவும் புல்லட் ரயில் திட்டத்தை தொடங்கி வைக்க ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயுடன் திறந்த ஜீப்பில் 8 கிமீ தூரம் பயணம் செய்தார். இருந்தாலும் புல்லட் ரயில் எதிர்ப்பு மற்றும் கூட்டணி கட்சி சிவ சேனா தொடர் எதிர்ப்பில் மோடி கவலையில் உள்ளதாக அவர் கட்சினர் கூறுகின்றனர்.
காங்கிரசும் தன்பங்கிற்கு தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கி விட்டது. அமெரிக்க சுற்றுப்பயணம் முடிந்து வந்த ராகுல்காந்தி நேரடியாக மூன்று நாள் தேர்தல் பிரசாரத்தை மாட்டு வண்டியில் சென்றும், நடந்தும், பல லட்சம் பேர் கூடிய பொது கூட்டத்தில் கலந்தும் சுமார் 137 கிமீ கடந்துமுடித்து விட்டார்.
அவர் சுற்றுப்பயணம் செய்த இடம் சவுராஷ்டிரா பகுதி என்று அழைக்கப்படும். 182 எம்எல்ஏக்களில் 52 பேர் இங்கு இருந்துதான் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே அவர் பா.ஜனதா ஆட்சியால் அதிருப்தியில் உள்ள பகுதி மக்களை, குறிப்பாக பட்டேல் சமூக மக்களை சந்தித்து பிரசாரம் செய்ததும், அவர்கள் ராகுலுக்கு அளித்த வரவேற்பும் தற்போது பா.ஜனதாவுக்கு பீதியை ஏற்படுத்தி விட்டன.