எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக முதல்வர் பழனிசாமி நெல்லை செல்ல உள்ள நிலையில் முதல்வரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த வழக்கறிஞர்கள் திட்டமிட்டு இருந்துள்ளனர்.
நெல்லை வழக்கறிஞர் செம்மணி தாக்கப்பட்டத்தை கண்டித்து இன்று நெல்லையில் 500-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் வழக்கறிஞர் செம்மணியை தாக்கிய காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மோகன கிருஷ்ணன் தலைமையில் பல வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியை சந்தித்து மனு அளித்தனர்.
விஷயம் விபரீதம் ஆனதை அறிந்த அரசு உடனடியாக நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே வழக்கறிஞர் செம்மணியை தாக்கிய காவல் ஆய்வாளர் ஸ்டீபன் ஜோஸ், உதவி ஆய்வாளர் பழனி, சிறப்பு உதவி ஆய்வாளர் செல்லத்துரை ஆகியோரை இடைநீக்கம் செய்து, உத்தரவிட்டுள்ளது.
காவலர்கள் ஜோஸ், முகமது சமீர், சாகர், விமல்குமார் ஆகியோரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன் இடையே வழக்கறிஞர்கள் மற்றும் காவல்துறைக்கு இடையேயான பிரச்சனைகளுக்கு தீர்வு காண உயர்நீதிமன்ற நீதிபதிகள் தலைமையிலான குழு அமைக்கப்படும் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.