இந்நிலையில் சென்னை அடையாறு இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், தனது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்துவதாக கூறுவதில் உண்மையில்லை என்றார்.
சசிகலா மற்றும் தன்னை போல அரசியலில் ஈடுபட்டுள்ள தங்களது குடும்பத்தினரை மிரட்டி பார்க்கவே இந்த ரெய்டுகள் நடத்தப்படுவதாக கூறியுள்ளார். இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே என்றார்.
அரசியலில் கடந்த 33 ஆண்டுகளாக சோதனைகளை சந்தித்து வருவதாக குறிப்பிட்டார். குறிப்பாக அரசியலில் ஈடுபட்டுள்ள சசிகலாவையும், என்னையும் அசைத்து பார்க்கவே இந்த சோதனை நடத்தப்படுவதாக மத்திய அரசை நேரடியாக சாடினார்.
இந்த சோதனையின் பின்னணியில் மத்திய அரசு செயல்படுவது வெளிப்படையாகவே தெரிகிறது என்று தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். இரட்டை இலை சின்னம் கிடைத்தால்கூட ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்-ஐ மக்கள் ஏற்கமாட்டார்கள்.
பயம் என்பதே எங்கள் குடும்பத்திற்கு கிடையாது, யாருடைய மிரட்டலுக்கும், பயமுறுத்தலுக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார். தவறான தகவலின் பேரிலேயே உறவினர்கள் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. எத்தனை ஆண்டுகள் சிறையில் போட்டாலும் மீண்டும் வந்து பணி செய்வோம் என்றும் தினகரன் கூறியுள்ளார்.
எங்களுக்கு ஆதரவாக உள்ள 190 இடங்களுக்கும் மேல் ரெய்டு நடத்துகின்றனர் வருமான வரித்துறையினர். சோதனை நடத்தி யாரை வேண்டுமானாலும் கைது கூட செய்யட்டும்.
கைதுக்கு எல்லாம் யாரும் இங்கு அஞ்சப்போவதில்லை என்றார். துணிச்சலோடு எதையும் எதிர்கொள்வோம் என்றார். பண்ணை வீட்டில் உரம் உள்ளிட்டவைகளும், படிக்காத பாமரர்களும் தான் உள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்தி வருமான வரித்துறை அங்கு ஏதாவது வேண்டாததை வைத்து விடப் போகிறார்கள் என்பதால், தனது ஆதரவாளர்கள் மற்றும் வழக்கறிஞரை அங்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.
எங்களை சிறையில் அடைத்தாலும் கட்சியை கடைக்கோடி தொண்டன் நடத்துவான் என்றும் தினகரன் கூறியுள்ளார். அதிமுகவை அழித்து பாஜக வளர்த்து விடலாம் என பகல் கனவு காணாதீர். எத்தனை அடக்குமுறைகள் வந்தாலும் நாங்கள் சமாளிப்போம்.
ஜெயா தொலைக்காட்சிக்கும், கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஜெயலலிதாவின் சாதனைகளை சொல்லவே ஜெயா தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. ஜெஜெ டிவியை முடக்கியதைப் போல ஜெயா டிவியையும் முடக்க சதி நடைபெறுகிறது என்றும் தினகரன் ஆவேசத்துடன் தெரிவித்தார்.