ஒரே நாளில் 190 இடங்களில் வருமானவரி ரெய்டு நடப்பது நாட்டில் இதுவே முதல் முறையாகும். வருமான வரித்துறை அதிகாரிகள் 2 ஆயிரம் பேர் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். சோதனைக்காக பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்து அதிகாரிகள் அழைக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள ஜெயா தொலைக்காட்சி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 2 வாகனங்களில் வந்த 8 பேர் கொண்ட குழு இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். காலை 6 மணி முதல் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வந்த புகாரை அடுத்து இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெயா டிவி டி.டி.வி தினகரன் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் விசாரணை முடிந்த நிலையில் டி.டி.வி. தினகரன் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டி.டி.வி.தினகரனை மிரட்டி பணிய வைக்க முயற்சி என்று டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் ஜெயா டிவி நிர்வாக இயக்குனர் விவேக் மற்றும் ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள நமது எம்ஜிஆர் அலுவலகம், ஜாஸ் சினிமாஸ் உள்ளிட்ட இடங்களில் வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதே போல் பெங்களூருவில் உள்ள டிடிவி தினகரன் ஆதரவாளரான புகழேந்தியின் இல்லத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பேசிய நாஞ்சில் சமபத், வருமானத்துறை சோதனை பற்றி அதிர்ச்சி அடையவும், ஆச்சரியப்படவும் ஏதும் இல்லை என்று கூறியுள்ளார்.
ஜெயா டிவியை கையகப்படுத்த எடப்பாடி அரசு முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ஆகாதவர்களை அழிக்க வருமானத்துறையை மத்திய அரசு ஏவுகிறது என்று அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து மன்னார்குடி அருகே சுந்தரகோட்டையில் உள்ள சசிகலா சகோதரர் திவாகரன் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
கீழதிருப்பாலக்குடியில் திவாகரனின் உதவியாளர் விநாயகம் வீட்டிலும், அதிமுக அணியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ். காமராஜர் வீட்டிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை மகாலிங்காபுரம் பகுதியில் உள்ள விவேக் ஜெயராமன் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும் நீலகிரியில் உள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கொடநாடு எஸ்டேட்டில் 12 பேர் கொண்ட குழு இன்று காலை முதல் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஜெயா டி.வி.யின் முக்கிய அதிகாரிகள் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
சென்னை, பெங்களூரு, கொடநாடு கூடலூர் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 6 மணி முதல் சோதனை நடைபெற்று நிலையில் தற்போது தஞ்சாவூரிலும், சசிகலா மற்றும் தினகரனுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
கருப்பு பண ஒழிப்பு முயற்சியின் நடவடிக்கையாக வருமான வரித்துறை சோதனை செய்து வருவதாவும், சோதனையில் எந்த அரசியல் பின்னணியும் கிடையாது என்றும் முதலமைச்சர் அணி ஆஸ்பயர் சுவாமிநாதன் கூறியுள்ளார்.
சசிகலா மற்றும் தன்னை போல அரசியலில் ஈடுபட்டுள்ள தங்களது குடும்பத்தினரை மிரட்டி பார்க்கவே இந்த ரெய்டுகள் நடத்தப்படுவதாக கூறியுள்ளார். இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே என்கிறார் இந்த ரெய்டுகள் குறித்து தினகரன்.