500 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு மதிப்பிழப்பு செய்தது திட்டமிட்ட கொள்ளை என்றும் வரலாற்றுப் பிழை என்றும் , அந்த நடவடிக்கையானது சட்டரீதியாக மேற்கொள்ளப்பட்ட முறைகேடு என்றும் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
குஜராத் மாநில சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, ஆமதாபாதுக்கு மன்மோகன் சிங் செவ்வாய்க்கிழமை சென்றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்டோருடன் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து விவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:
உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் எதற்காக மதிப்பிழப்பு செய்யப்பட்டதோ, அந்த நோக்கங்கள் எதுவும் நிறைவேறவில்லை. அந்த நடவடிக்கை ஒரு திட்டமிட்ட கொள்ளை; சட்டரீதியில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடு; மொத்தத்தில் விளைவுகளை ஆராயாமல் மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுப் பிழை.
உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பும், சரக்கு மற்றும் சேவை வரியும், இந்தியப் பொருளாதாரத்தின் மீது தொடுக்கப்பட்ட இரட்டைத் தாக்குதல்களாகும். அவை நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தி விட்டன. இந்த மிகப்பெரிய தவறில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளவில்லை.
விவசாயிகளின் வருமானத்தை வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக உயர்த்திக் காட்டப் போவதாக பிரதமர் தெரிவித்து வருகிறார். இது தேர்தலுக்காக அவர் அளிக்கும் பொய்யான வாக்குறுதி.
நல்ல நிர்வாகம் என்பது, மூளை மற்றும் இதயம் ஆகிய இரண்டையும் பயன்படுத்திச் செயல்படுவதாகும். ஆனால் இந்த இரண்டையும் பயன்படுத்துவதில் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
குஜராத்தின் ஆமதாபாதுக்கும், மகாராஷ்டிரத்தின் மும்பைக்கும் இடையே புல்லட் ரயில் விடும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்தத் திட்டம், தற்பெருமைக்காக செயல்படுத்தப்படுகிறது.இந்தத் திட்டத்தால், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 6.5 கோடி மக்களுக்கோ அல்லது நாட்டு மக்களுக்கோ எந்தப் பயனும் கிடையாது. புல்லட் ரயில் திட்டத்தில் கவனம் செலுத்துவதை விடுத்து, ஏற்கெனவே நாட்டில் இருக்கும் ரயில்வே கட்டமைப்பின் மீது மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்றார் மன்மோகன் சிங்.
மேலும் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது: கடந்த 1992ம் ஆண்டு சரோவர் அணை கட்ட உலக வங்கியிடம் குஜராத் அரசு நிதியுதவி கோரியிருந்தது. அதனை உலக வங்கி நிராகரித்தது.
அப்போதைய நிதியமைச்சராக இருந்த நான் அத்திட்டத்திற்கு உதவுவதாக வாக்குறுதி அளித்தேன். ஆனால், அப்போது மோடி என்னை சந்தித்ததாகவும், அத்திட்டத்திற்கு நான் உதவவில்லை எனவும் அவர் கூறுவது தவறான தகவல். அச்சமயங்களில் அவர் என்னை சந்திக்கவே இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக குஜராத்தில் நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணையை திறந்து வைத்து கடந்த செப்., மாதம் நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்தார். அப்போது இத்திட்டத்திற்கு மன்மோகன்சிங் ஒத்துழைக்கவில்லை எனவும், காங்., ஆட்சியாளர்கள் இத்திட்டப் பணிகளை முடக்கினார்கள் எனவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.