திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், போந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஞானசேகரன். வயது 56. இந்திரா என்ற மனைவியும், மங்கையர்க்கரசி, மணிமேகலை என்ற மகள்களும், சுதாகர் என்ற மகனும் உள்ளனர்.

Special Correspondent

இவருக்கு சொந்தமாக 20 ஏக்கர் நிலம் போந்தை கிராமத்தில் உள்ளது. தனது நிலத்தில் ஒரு பகுதியை சாத்தனூர் எஸ்.பி.ஐ. வங்கியில் அடகு வைத்து 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் டிராக்டர் கடன் வாங்கினார். இந்த கடனில் ஒன்றே முக்கால் லட்சம் செலுத்தியுள்ளார். மீதி தவணைக்கான தொகை நிலுவையில் உள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக சரியாக மழை இல்லாத காரணத்தினால் தவணையை ஞானசேகரனால் செலுத்த முடியவில்லை. வங்கியில் இருந்து இவரை அழைத்து கடனை கட்டச் சொல்லி கேட்டுள்ளனர். இவரும், தற்போதுதான் மழை பெய்துள்ளது. நெல் அறுவடை செய்த பின்னர் கடனை செலுத்துகிறேன் அல்லது பன்னாரி சர்க்கரை ஆலையில் கரும்பு பாக்கித் தொகை ரூபாய் 3,50,000 வர வேண்டியுள்ளது. அதற்கான காசோலை வந்தாலும், உங்கள் வங்கியில்தான் எடுக்க முடியும். ஆகவே உங்கள் கடனை செலுத்தி விடுகிறேன் என்று வங்கி மேலாளரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 4ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு போந்தையில் உள்ள ஞானசேகரனின் வீட்டுக்கு இருவர் TN09 DF4903 என்ற இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அவர்கள் இருவரும் வீட்டில் இருந்த ஞானசேகரனின் மகன் சுதாகரிடம், நாங்கள் வங்கியில் இருந்து வருகிறோம். வங்கிக்கு கடனை செலுத்தாததால் டிராக்கடரை பறிமுதல் செய்ய வந்துள்ளோம் என கூறியுள்ளனர். அவரும் இந்த தகவலை தனது தகப்பனார் ஞானசேகரனிடம் செல்போன் மூலம் கூறியுள்ளார்.

வெளியூரில் இருந்த ஞானசேகரன், தனது நண்பர் மூர்த்தியுடன் உடனடியாக வீட்டுக்கு வந்துள்ளார். வந்தவர் வங்கியில் இருந்து வந்தவர்களிடம் அவர்களது பெயரை கேட்டுள்ளார். ராஜா, வேங்கடபதி என பெயரை கூறியவர்களின் அடையாள அட்டையை கேட்டபோது, டிரைவிங் லைசென்ஸ்ஸை காட்டியுள்ளனர்.

ட்ராக்டர் பறிமுதல் செய்ய வந்ததற்கான ஆதாரத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆதாரங்களை அவர்கள் காட்டாததால், உங்களை வங்கி ஆட்கள் என எப்படி நம்புவது என ஞானசேகரன் கேட்க, இருதரப்புக்கும் வாக்குவாதம் ஆகியுள்ளது. நீங்கள் வண்டியை எடுத்துக்கொள்ளுங்கள், ஆனால் வங்கியில் இருந்தோ, காவல் நிலையத்தில் இருந்தோ அதிகாரிகளை வரவழைத்து வண்டியை எடுத்துச் செல்லுங்கள், இல்லையேல் வண்டியை எடுக்க அனுமதிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.

இதில் இருதரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. உடனே வங்கி ஏஜெண்டுகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

மதியம் வாக்கில் ஞானசேகரன் தனது நண்பருடன் வாணியம்பாடி செல்லப் புறப்பட்டபோது, அவரையும் நண்பரையும் இடைமறித்த வங்கி ஏஜெண்டுகள் ஞானசேகரனை கடுமையாக தாக்கினர். இதில் வலி தாங்காமல் அலறிய ஞானசேகரன் கீழே விழுந்தார். அவருடைய கூச்சல் கேட்டு மகன் சுதாகர் ஓடிவந்தார். பின்னர் ஞானசேகரன் வாணியம்பாடி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இரவு 9 மணி அளவில் சிகிச்சை பலனின்றி ஞானசேகரன் உயிரிழந்தார்.

4 ஆம் தேதி ஞானசேகரன் இறந்த நிலையில், தாணிப்பாடி காவல்நிலையத்தில் மறுநாள் 5 ஆம் தேதி காலை ஞானசேகரன் மற்றும் அவரது மகன் சுதாகர் உள்ளிட்ட சிலர்மீது வசூல் ஏஜெண்டு ராஜா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் ராஜா, தன்னை ஞானசேகரன் தாக்கியதாக கூறி உள்நோயாளியாக சேர்ந்துள்ளார். வேங்கடபதியோ தலைமறைவாக இருக்கிறார்.

கரும்பு நிலுவைத் தொகையையே விவசாயிகளுக்கு வழங்கவில்லை. அப்படி வழங்கியிருந்தால்கூட ஞானசேகரன் டிராக்டருக்கான கடனை அடைத்திருப்பார்.

கடன் வசூல் என்ற பெயரில் அச்சுறுத்தியுள்ளனர். ஞானசேகரன் உயிரிழப்புக்கு காரணம் மத்திய, மாநில அரசுகள் மற்றும் எஸ்.பி.ஐ. மூன்றும்தான். வங்கி மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஞானசேகரன் இறந்த பின்னர் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது காவல்துறை. காவல்துறை மீது மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர். இந்த விசயத்தில் கோர்ட் தலையிட்டு சொன்னபிறகுதான் வழக்கில் இருந்து ஞானசேகரன் பெயரை நீக்க முடியும் என்று கலெக்டர் கூறுகிறார்.

ஞானசேகரன் மகன் மீது எதற்காக வழக்கு போட வேண்டும். கடனை வசூலிக்க இவர்கள் யார். விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினால் குண்டர் சட்டம் பாய்கிறது வளர்மதி மீது. பிணத்தின் மீது வழக்கு போடுவது உலகத்தில் எங்கும் கிடையாது. அடாவடியாக வங்கிக் கடன் வசூல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஆர்பிஐயிடம் மனு கொடுத்தும் இந்த செயல் நீடிக்கிறது" என்றார் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் மாநில கூட்டமைப்பின் தலைவர் பி.ஆர். பாண்டியன்.

தனியார் வங்கிகளைப்போல தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும் அடியாட்களை வைத்து வசூல் செய்யலாமா என்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு எஸ்.பி.ஐ. வங்கிக்கு உள்ளது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.