வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் சென்னையில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தனது மனுவில், கடந்த 2015 டிசம்பர் மாதம் ஏற்பட்ட பேரிடர் வெள்ளத்திலிருந்து அரசு இன்னமும் பாடம் கற்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஐகோர்ட் உத்தரவிட்ட பின்னரும் நீர்நிலைகள் தூர்வாரப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும் வெள்ளக்காலத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள பேரிடர் மேலாண்மைக் குழு அமைக்க உத்தரவிடவும் மனுவில் கோரப்பட்டுள்ளது. மேலும் எண்ணூரில் நடிகர் கமல் பார்வையிட்டதால் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக மனுதாரர் சாடியுள்ளார்.
இதனை தொடர்ந்து கடுப்பான நீதிபதிகள் சென்னையில் பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக குறிப்பிட்ட தலைமை நீதிபதி, மழை வெள்ள தடுப்பு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சியும் வெள்ளத் தடுப்பு குறித்த அறிக்கையை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட விவரம், மழைநீர் கால்வாய் பராமரிப்பு உள்ளிட்டவை குறித்தும் அறிக்கை தர நீதிபதி உத்தரவிட்டார்.
வெள்ள பாதிப்புகளை தடுக்க குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்களை முறையாக வகுத்து செயல்படுத்த அறிவுறுத்தியுள்ளார்.
வழக்கு விசாரணையின் போது அரசு நிர்வாகத்தை உயர்நீதிமன்றமே ஏற்று நடத்த முடியாது என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி காட்டமாக கூறினார்.
மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் போதாது என்ற அவர், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அவர் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு விசாரணையை வரும் வெள்ளிகிழமைக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.