நேற்று ஒரே நாளில் மெரினாவில் மட்டுமே டிஜிபி அலுவலகம் அருகே 30 செ.மீ. அதிகபட்சமாக மழை பெய்துள்ளது . இதனால் அதிமுக அலுவலகம் மற்றும் கோபாலபுரம் திமுக தலைவர் வீடு உள்ளிட்ட இடங்கள் தண்ணீரில் மூழ்கியது.
இந்த நிலையில் சென்னையில் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை படகுகள் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
மேலும் 2 சுரங்கப்பாதைகளில் மட்டுமே தண்ணீர் தேங்கியுள்ளது என்றும், பிரதான சாலைகளில் போக்குவரத்து தடைப்பட வில்லை என்றும் கார்த்திகேயன் கூறியுள்ளார்.
கீழ்பாக்கத்தில் உள்ள மழைநீர் தேங்கியுள்ள கெங்குரெட்டி சுரங்கப்பாதையை ஆய்வு செய்த அவர், சென்னையில் உள்ள 16 சுரங்கப்பாதையில் 14 சுரங்கப்பாதைகளில் தண்ணீர் வெளியேற்றி விட்டதாக கூறினார்.
கணேஷபுரம் சுரங்கப்பாதை, கெங்குரெட்டி சுரங்கப்பாதைகளில் மட்டுமே தண்ணீர் தேங்கியுள்ளதாக கூறிய கார்த்திகேயன், தேங்கியிருக்கும் தண்ணீர் 45 நிமிடங்களில் வெளியேற்றப்படும் என்றும் கூறினார். பிரதான சாலைகள் எதிலும் தண்ணீர் தேங்கவில்லை என்றும் பள்ளிக்கரணை, வேளச்சேரி, ஆதம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்க முக்கியதுவம் அளித்து வருவதாக அவர் கூறினார். சென்னையில் 176 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், ஆனால் 8 முகாம்கள் மட்டுமே தற்போது செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பெரும் அளவிலான மக்கள் முகாம்களுக்கு வரவில்லை என்றும் குறிப்பிட்ட அவர், மிக விரைவில் மருத்துவ முகாம்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மழை பாதிப்பு குறித்து இதுவரை வந்த 599 புகார்களில் 300க்கும் மேற்பட்ட புகார்களுக்கு தீர்வு காணப்பட்டதாக கார்த்திகேயன் தெரிவித்தார்.