உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு கட்-அவுட்டுகள் வைக்கப்படுவது குறையும் என்று பார்த்தால் அதிகரித்திருக்கிறது. உயிரோடு இருப்பவர்களின் படத்தைத்தான் வைக்ககூடாது, இறந்தவர்களின் படத்தைப் போட்டு அவிநாசி சாலை முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட கட் அவுட்களை அதிமுகவினர் வைத்துள்ளனர்.
மேலும், கட்-அவுட்டுக்குதானே தடை; பலூன் விடுகிறோம் என்று பல இடங்களில் கட்-அவுட்டுக்கு பதிலாக பலூன் விளம்பரம் செய்திருந்தனர்.
இந்நிலையில் கோவை மாவட்ட அதிமுகவின் தலைமைக்கழகம் அருகே தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர், மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியின் பொறுப்பாளர்கள் புகைப்படம் போட்டு வைக்கப்பட்டுள்ள பேனர் உயர்நீதிமன்ற ஆணையை மீறி வைக்கப்பட்டுள்ளதை காவல்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பேனரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பேனரில் முதல்வரின் புகைப்படம் இருக்கிறது, அதுவும் அகற்றப்படவில்லை.
தமிழக முதல்வர், துணைமுதல்வர் உட்பட அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் இறந்தவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டனரா என்ற கேள்வியை இது எழுப்பும் என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர்.