தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், சட்டசபையில் தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார்.

Special Correspondent

அப்போது அவருக்கு எதிரான அணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், மா.பா.பாண்டியராஜன், செம்மலை, ஆறுகுட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், மனோரஞ்சிதம், சரவணன், சின்னராஜ், ஆர்.நட்ராஜ் ஆகிய 11 எம்.எல்.ஏ.க்கள் அரசு தலைமை கொறடாவின் உத்தரவை மீறி நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக ஓட்டு போட்டனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி, தி.மு.க. கொறடாவும், எம்.எல்.ஏ.வுமான சக்கரபாணி சபாநாயகரிடம் புகார் செய்தார். இதேபோல், டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், பார்த்திபன், ரங்கசாமி ஆகியோரும் புகார் செய்தனர்.

இந்த புகார்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்காததால், சென்னை ஐகோர்ட்டில் சக்கரபாணி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் விசாரித்தனர். அனைத்து தரப்பு வக்கீல்களின் வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து கடந்த மாதம் 7-ந்தேதி உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்யக்கோரும் வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்கள்.

நீதிபதிகள் 11 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகார் மீது சபாநாயகர் எந்த ஒரு முடிவும் எடுக்காமல் இருக்கும்போது, அவரது அதிகாரத்தில் தலையிட்டு, எந்த ஒரு உத்தரவையும் இந்த ஐகோர்ட்டு பிறப்பிக்க முடியாது.

மேலும், சபாநாயகருக்கு உத்தரவிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதா? என்பது குறித்து முடிவு செய்யும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வில் நிலுவையில் உள்ளது.

அந்த வழக்கில் இன்னும் தீர்ப்பு வராத நிலையில், சபாநாயகரின் அதிகாரத்தில் ஐகோர்ட்டு தலையிட முடியாது. புகார் மனுக்களை பரிசீலித்து தகுந்த முடிவை எடுக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு உத்தரவிடவும் முடியாது தீர்ப்பில் கூறி இருந்தனர்.

இதனை பல மாதங்களாக இழுக்காமல் முதலிலே தள்ளுபடி செய்து இருக்காலமே என்று பல்தரப்பிலும் கண்டனம் வந்த நிலையில் தாம் மனசாட்சி படி செயல் பட்டதாக தலைமைநீதிபதி தெரிவித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து தி.மு.க தரப்பில் மேல் முறையீடு செய்யப்போவதாக இருந்த நிலையில் 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய கோரிய விவகாரம் தொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களும் தனித்தனியாக சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்து உள்ளனர். அதில் தங்கள் தரப்பு கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என கோரிக்கை விடுத்து உள்ளனர்.