இமாச்சலப்பிரதேச மாநிலம் சோலான் மாவட்டத்தில் உள்ள கசவுலி என்ற மலைப்பாங்கான பகுதியில் பலர் விதிமுறைகளை மீறி உணவு விடுதிகள் கட்டியுள்ளனர். இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஆக்கிரமிப்புகள் உடனே அகற்ற வேண்டும் என கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவு நகலுடன் விதிமுறைகளுக்கு புறம்பாக உணவு விடுதிகளை கட்டியுள்ளவர்களை எச்சரிப்பதற்காக நகர திட்டமிடல் துறை பெண் அதிகாரி ஷாலி பால சர்மா என்பவர் சக அதிகாரிகளுடன் நேற்று செவ்வாய்கிழமை அப்பகுதிக்கு சென்று உணவு விடுதி கட்டியுள்ளவர்களை எச்சரிக்கை செய்துள்ளார்.
அப்போது, ஆக்கிரமிப்பாளர்களுக்கும் பெண் அதிகாரிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின்னர், ஒரு வாரத்திற்குள் விதிமுறையை மீறி கட்டியுள்ள கட்டிடங்களை இடிக்க வேண்டும் என அதிகாரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்த சிலமணி நேரங்களில் அங்குள்ள உணவு விடுதி உரிமையாளர் விஜய் சிங் என்பவர் தமக்கு ஆளும் கட்சியின் பாஜக வில் செல்வாக்கு அதிகம் என்றும் கூறி பெண் அதிகாரியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு தப்பி சென்றுள்ளார். இதில், மற்றொரு அதிகாரி ஒருவரும் காயமடைந்தார். இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே, இன்று ஷாலி பால சர்மா சுட்டுக்கொல்லப்பட்டதை தானே முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்றம், இது நீதிமன்ற உத்தரவின் மீறுதலுக்கான ஒரு வெட்கக்கேடான செயல் என்றதுடன் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிக்கு ஏன் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கவில்லை? என அம்மாநில பாஜக அரசை கேள்வி கேட்டதுடன் ., பாதுகாப்பு கொடுக்கப்பட்டது என்றால் குற்றம் சாட்டப்பட்டவர் எப்படி தப்பித்து சென்றார் என்பதை விசாரணை நடத்தி பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.