உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவளித்தால் எம்.பிக்கள் வழக்கறிஞராக தொழில் செய்ய முடியாது என்று இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் செல்லமேஸ்வர் உள்ளிட்ட உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் நால்வர், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் தங்களிடம் ஒப்படைக்கப்படுவதில்லை என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக பத்திரிகையாளர்கள் முன்னிலையில் குற்றம் சாட்டினர்.
இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் நீதிதுறை வட்டாரங்களில் பரபரப்பு நிலவியது. அதன் தொடர்ச்சியாக இதர நீதிபதிகளின் நம்பிக்கையினை இழந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் தலைமை நீதிபதியை பதவி நீக்கும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். அதற்கான முயற்சியில் அவர் இதர எதிர்கட்சிகளுடன் பேசி வருவதாகத் தகவல்கள் வெளியாகின.
இதனை 48 எம்பிகளை கொண்ட காங்கிரஸ் ஆதரிக்கும் என்ற செய்தி வந்த இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவளித்தால் எம்.பிக்கள் வழக்கறிஞராக தொழில் செய்ய முடியாது என்று இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: "நாடாளுமன்ற மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் பலரும், இந்திய பார் கவுன்சிலில் பதிவு செய்த உறுப்பினர்களாக உள்ளனர்.
எனவே உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு எதிரான நாடாளுமன்ற தீர்மானத்துக்கு ஆதரவளித்தால், வழக்கறிகளாக உள்ள எம்.பிக்கள் அவர்களது பதிவினை இழக்க நேரும். அவர்கள் வழக்கறிஞராக தொழில் செய்ய முடியாது" என்றார்.