பேஸ்புக் பயன்படுத்துவோரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்ட விவகாரத்தால், பொறியில் சிக்கிய எலி போல் பேஸ்புக் நிறுவனம் உலகளவில் சி்ன்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது.
அதன் செயல்பாடு பற்றி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் தீவிரமாக விசாரிக்க தொடங்கியுள்ளன. இதனால், அதன் ‘கிரைம் ரேட்’ கிடுகிடுவென உயர்ந்து கொண்டிருக்கிறது. சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக விளங்கும் ‘பேஸ்புக்’ உலகம் முழுவதும் 200 கோடி மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இதில், தங்களுடைய பொழுதுபோக்கு, பிடித்த விஷயங்கள், பெயர், படித்த பள்ளி, கல்லூரிகள், வேலை, பணியாற்றும் நிறுவனம், ஊர், குடும்ப உறவினர்கள் விவரம் உள்ளிட்ட பல்வேறு தனிப்பட்ட தகவல்களை மக்கள் சேமிக்கின்றனர்.
இத்தகவல்கள், அவர்களுக்கே தெரியாமல் பல்வேறு முறைகேடான செயல்களுக்கு பயன்படுத்தப்படும் திடுக்கிடும் தகவல் சமீபத்தில் வெளியானது. தேர்தலில் வாக்காளர்களின் மனநிலையை மாற்றுவது, வர்த்தக நிறுவனங்களுக்கு இந்த தகவல்களை கொடுத்து வியாபாரத்தை பெருக்குவது, இந்த தகவல்களின் அடிப்படையில் வர்த்தக வியூகத்தை மாற்றுவது, விளம்பரங்கள் செய்வது என பல்வேறு செயல்களுக்கு இவை பயன்படுத்தப்படுகின்றன.
கடந்த 2016ல் அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பின் செல்வாக்கை உயர்த்துவதற்காக பேஸ்புக்கை பயன்படுத்தும் 5 கோடி பேரின் தகவல்களை லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘கேம்பிரிட்ஜ் அனலிடிகா’ நிறுவனம் திருடியதாக சமீபத்தில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
இதைத் தொடர்ந்து, அடுத்த பூகம்பம் இந்தியாவில் வெடித்தது. தத்தம் செல்வாக்கை உயர்த்துவதற்காக, ‘கேம்பிரிட்ஜ் அனலிடிகா’ நிறுவனத்துடன் காங்கிரஸ் மற்றும் பாஜக ஒப்பந்தம் செய்து இருப்பதாக இரு கட்சியினரும் பரஸ்பர பகிரங்க குற்றச்சாட்டை கூறி வருகின்றனர்.
இந்திய அரசின் நடவடிக்கையை தொடர்ந்து, பல்வேறு உலக நாடுகளும் விழித்துக் கொண்டு பேஸ்புக் நிறுவனமும், கேம்பிரிட்ஜ் அனலிடிகாவும் தங்கள் நாடுகளிலும் தகவல் திருட்டில் ஈடுபட்டுள்ளதா என தீவிர விசாரணை நடத்துகின்றன.
அதற்கு அடுத்தடுத்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது. தகவல் திருட்டு சம்பவத்துககாக ஜுகர்பெர்க் பகிரங்க மன்னிப்பு கேட்ட போதிலும், தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் அதன் செயலை எந்த நாடும் மன்னிப்பதாக இல்லை.
இதற்கிடையே, ‘கேம்பிரிட்ஜ் அனலிடிகா’ நிறுவனம் இதுவரை திருடி சேர்த்த பேஸ்புக் தகவல்கள் அனைத்தையும் இங்கிலாந்து அரசு அதிரடியாக பறிமுதல் செய்துள்ளது. பேஸ்புக் நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ள இந்த சிக்கலால், உலகளவில் அதன் பங்குகளின் மதிப்பு 15 சதவீதம் சரிந்துள்ளது. இதனால், பல நூறு கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
தகவல் திருட்டு குற்றச்சாட்டால் ஆட்டம் கண்டுள்ள பேஸ்புக் நிர்வாகம், எதிர்காலத்தில் இதுபோன்ற திருட்டுகள் நடப்பதை தடுப்பதற்காக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நேற்று முன்தினம் அறிவித்தது. அடுத்த சில வாரங்களில் இவை செயல்பாட்டுக்கு வரும் என்றும் கூறியுள்ளது.
பேஸ்புக் எடுத்துள்ள சில பாதுகாப்பு நடவடிக்கைகள் விவரம் :
தற்போது, ‘பிரைவசி செட்டிங்’ மற்றும் முக்கியமான ‘டூல்’களை மக்கள் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கிறது. இனிமேல், பேஸ்புக் பயன்படுத்துவோர் ‘யூசர் செட்டிங்’கில் எளிதாக நுழைந்து, தகவல்களின் பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்தலாம்.
தங்களின் பேஸ்புக் முகவரியை யார் பார்க்கிறார்கள், அவர்களின் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
தேவையில்லாத அல்லது விரும்பாத தகவல்களை உடனடியாக ‘டெலிட்’ செய்யலாம். அதற்கான ‘டூல்’சும் ‘செட்டிங்’கும் ‘ஷார்ட் கட்’ முறையில் இனிமேல் எளிதாக கையாளும் வகையில் அமைக்கப்படும்.பேஸ்புக்கின் சேவை மற்றும் புள்ளி விவர கொள்கை, பேஸ்புக் எப்படி தகவல்களை சேகரிக்கிறது, அவற்றை எப்படி பயன்படுத்துகிறது என்பது பற்றிய விவரங்களை மக்கள் இனிமேல் வெளிப்படையாக தெரிந்து கொள்ளலாம்.
பேஸ்புக்கில் கிடைக்கும் தகவல்கள் வர்த்தக ரீதியான விளம்பரங்களுக்கு பயன்படுத்த ‘பங்குதாரர் பிரிவு’ (பார்ட்னர் கேட்டகரிஸ்) என்ற வசதி பயன்படுத்தப்படுகிறது. இது இனிமேல் ரத்து செய்யப்படும்.