நாகை மாவட்டம் சீர்காழியில் பட்டப்பகலில் அதிமுக பிரமுகர் ரமேஷ் பாபு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.
மணல் பாபு என்ற பெயரில் அறியப்பட்ட 45 வயதான இவர், நாகை மாவட்டம் சீர்காழி அருகே வருசப்பத்துவைச் சேர்ந்தவர். அரசியல் தளத்தில் மட்டுமின்றி, மணல், நில வியபாரத்திலும் இவர் படு பிஸி மேலும் அதிமுக அமைச்சர் ஓ.எஸ். மணியன்க்கும் படு நெருக்கம்.
இவர் தனது சொகுசுக் காரில் சுமார் 11.30 மணி அளவில் சீர்காழி கடை வீதியில் கார் சென்றபோது, எதிரில் மற்றொரு காரில் வந்த மர்மகும்பல் ரமேஷ் பாபுவின் கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளது.
அதிர்ச்சியில் உறைந்துபோன ரமேஷ்பாபு, தன்னை கொலை செய்ய அந்த கும்பல் வந்துள்ளதை உணர்ந்த பிறகு காரிலிருந்து இறங்கியோட முயற்சி செய்தார்.
ஆனால், வந்த கும்பல் ரமேஷ்பாபுவை விடவில்லை, காரிலிருந்து இறங்கிய ரமேஷ்பாபுவின் தலையில் அவர்கள் அரிவாளால் தாக்கியுள்ளனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கு அதிபதியாக இருந்தாலும், வெட்டப்பட்டு கீழே சரிந்தவுடன் ரமேஷ்பாபுவுக்கு உதவ யாரும் முன்வரவில்லை.
தலை, கழுத்து, முகம் என 10 வெட்டுக்கும் அதிகமாக இடங்களில் வெட்டப்பட்டதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ரமேஷ் பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அரசியல் பிரமுகர்களின் அதிகாரப் பலத்துடன், மணல், கட்டுமானம், நிலவியபாரம் என பல தொழில்களில் கொடிகட்டிப்பறந்த ரமேஷ்பிரபுவுக்கு எதிரிகள் ஏராளம் என்று கூறப்படுகிறது.
ஆள்நடமாட்டம் உள்ள தெருவில், பட்டப்பகலில் துணிந்து இந்த கொலையை அந்த கும்பல் செய்திருப்பதால், முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட ரமேஷ் பாபுவின் உடல் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மணல் பாபு என்ற பெயரில் மாவட்டம் முழுவதும் அறியப்பட்ட, ரமேஷ் பாபு திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது தொழில் போட்டியா?
அல்லது அதிமுகவில் நிலவும் கோஸ்டி அரசியல் ரீதியான முன்விரோதமா அல்லது மணல் கடத்தல் விவகாரமா ஆகிய கோணங்களில் நாகை மாவட்ட போலீசார் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ரமேஷ்பாபுவின் உடல் நாளை பிரேத பரிசோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர் ஓ.எஸ். மணியன், ரமேஷ்பாபுவின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். ரமேஷ்பாபு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து அதிமுகவில் கோஸ்டி கலவரம் ஏற்படாமல் தடுக்க சீர்காழியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்பு செய்திகள் : எடப்பாடியின் பினாமி எஸ்.பி.கே : ஸ்டாலின் கடும் தாக்கு