மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை 2017 ஆம் ஆண்டிற்கான தொழில் மற்றும் வணிகம் செய்வதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
இதில் முதலீட்டாளர் பாதுகாப்பு மற்றும் மின்சார வசதி, கடன் வசதி, தொழில் தொடங்க உகந்த சூழ்நிலை, தொழில் தொடங்கும் நடைமுறைகள் குறித்து இது வரிசைப்படுத்தப்படுகிறது.
இந்தப் பட்டியலில் வழக்கம் போலவே ஆந்திரப் பிரதேசம் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. ஆந்திரத்திலிருந்து பிரிந்த தெலுங்கானா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
ஹரியானா, சத்தீஸ்கர், குஜராத் ஆகிய மாநிலங்கள் முறையே 3 முதல் 5 வரையிலான இடங்களைப் பிடித்துள்ளன.
கர்நாடகம் எட்டாவது இடத்தையும், ராஜஸ்தான் 9 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த மாநிலமான தமிழகத்தால் முதல் 10 இடங்களுக்குள் வர முடியவில்லை.
தொழில்துறை மாநிலங்களாக கருதப்படும் குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் முதல் 10 இடங்களுக்குள் குஜராத் மட்டும் இடம் பெற்றுள்ளது.
தமிழ்நாடு 15 வது இடத்தையும், மகாராஷ்டிரா 13 வது இடத்தையும் பிடித்துள்ளது. தமிழகத்தை அடுத்து ஹிமாச்சல பிரதேசம், அசாம், பீகார், கோவா, பஞ்சாப், கேரளா, ஜம்மு காஷ்மீர் மற்றும் டெல்லி போன்ற மாநிலங்கள் உள்ளன.
2010 களில் முதல் 5 இடத்திலே இருந்த தமிழகம் இப்போது முதல் 10 இடங்களுக்கு கூட தமிழ்நாடு வரமுடியாமல் உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் உள்ள தமிழ்நாடு, தொழில் செய்வதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலிலும் அதே இடத்தில் இருந்தால் மட்டுமே தொழில்துறை முன்னேற்றத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும்.
ஆனால், 2015 ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வரும் இப்பட்டியலில் இதுவரை முதல் 10 இடங்களை தமிழகம் பிடிக்க முடியாதது வெட்கித்தலைகுனிய வேண்டிய ஒன்றாகும் என்கிறார் பாமக வின் தலைவர் டாக்டர் ராம்தாஸ்.
தொடர்பு செய்திகள் : சுவிஸ் தேசிய வங்கியில் இந்தியர்கள் பணம் அதிகரிப்பு 73வது இடத்திற்கு முன்னேற்றம்