நாட்டின் 73 சதவீத சொத்துக்கள் / வளங்கள், 1 சதவீத மக்களிடம் மட்டுமே உள்ளது. இது மக்களிடையே வருவாய் சமநிலை இல்லாத நிலையை காட்டுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
சர்வதேச அமைப்பான ஆக்ஸ்போம் ஹவர்ஸ், இந்திய மக்களிடையே வருவாய் சமநிலை, சொத்துக்களின் சதவீதம் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாக கொண்டு நடப்பாண்டில் ஆய்வு மேற்கொண்டது.
2017ஆம் ஆண்டிற்கான இந்த ஆய்வை நேற்று வெளியிட்ட ஆக்ஸ்போம், இதுகுறித்து பல தகவல்களையும் வெளியிட்டது.
அதாவது, இந்திய மக்கள்தொகையில் வெறும் 1 சதவீதத்தினரிடம், நாட்டின் ஒட்டுமொத்த சொத்துமதிப்பில் 73 சதவீதம் இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், 67 கோடி இந்தியர்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழ் இருப்பதாகவும், அவர்கள் இந்த காலகட்டத்தில் தங்கள் சொத்துமதிப்பினை வெறும் 1 சதவீதம் மட்டுமே உயர்த்தியுள்ளதாகவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் வெறும் 1 சதவீதத்தினரிடம், 82 சதவீதம் சொத்துகள் இருப்பதாகவும், கிட்டத்தட்ட 3.7 பில்லியன் மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்வதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு இதே நிறுவனம் வெளியிட்ட ஆய்வில் 1 சதவீதத்தினரிடம், இந்திய நாட்டின் 58 சதவீதம் சொத்துகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு இது கிட்டத்தட்ட 20.9 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. மேலும், இதே அளவு நிதிதான் 2017 - 18 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டாக ஒதுக்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதே நிலை நீடித்தால் இந்தியாவின் ஒரு ஆடை உற்பத்தி நிறுவனத்தில் வேலைசெய்யும் ஒரு ஊழியர், அதே நிறுவனத்தில் அதிக வருமானம் ஈட்டும் உயரதிகாரியைப் போல சொத்துமதிப்பில் உயர 941 ஆண்டுகள் பிடிக்கும் என்ற திடுக் தகவலையும் இதே ஆய்வு தெரிவிக்கிறது.