காஞ்சிபுரம், உத்திரமேரூர் வட்டம், சாலவாக்கத்தை அடுத்த பாலேஸ்வரம் கிராமத்தில் கேரளா மாநிலம், எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த தாமஸ் என்ற தனியாருக்குச் சொந்தமான செயின்ட் ஜோசப் தொண்டு நிறுவனம், ஏழு ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
இந்தத் தொண்டு நிறுவனத்துக்குச் சொந்தமான போலி ஆம்புலன்ஸ் வாகனத்தில், திருவள்ளூர் மாவட்டம், கூவாகம் பகுதியைச் சேர்ந்த அன்னம்மாள் என்ற மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் பிரபு துணிச்சலாகச் செயல்பட்டு வாகனத்தை இடைமறித்து விசாரித்தபோது, ஓட்டுநர் ராஜேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுத் தகராறு செய்துள்ளார்.
இதைக் கவனித்த பொதுமக்கள் ஒன்று திரண்டு வாகனத்தின் உள்ளே இருந்த மூதாட்டியைக் காப்பாற்ற முயற்சித்தபோது பேரதிர்ச்சி அடைந்துள்ளனர். அங்கே, சுயநினைவில்லாத திண்டுக்கல்லைச் சேர்ந்த முதியவர் செல்வராஜ் என்பவரும், அவருக்கு அருகில் ஒரு சடலம் துணியால் சுற்றி வைக்கப்பட்டு, எந்த ஆவணமும் இல்லாமல் கடத்தப்படுவதை அறிந்த பொதுமக்கள் சாலவாக்கம் காவல் நிலையத்திற்குத் தகவல் கூறிக் காவலர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்தச் செய்தி தொலைக்காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டது. இதைப் பார்த்த மக்கள் சாலவாக்கம் காவல்நிலையம் முன் திரண்டு, தொண்டு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திக் குரல் கொடுத்தனர்.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும் கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.
உயிரிழந்தவர்களின் உடல் பதப்படுத்தப்பட்டு எலும்புக்கூடுகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து அங்கு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆதரவற்ற முதியவர்கள் பலர் சாலையோரத்தில் படுத்திருந்தபோது கடத்தி கொண்டுவரப்பட்டு அடைத்து வைக்கப்பட்டதாக தெரிவித்தனர். மருத்துவ ஆவணங்கள், முறையான சான்றிதழ்கள் இல்லாமல், இறந்த உடல்களை அடக்கம் செய்யாமல், பாதாள பிண அறையில் போட்டும் ., 2017 செப்டம்பருக்குப் பின்னால் உரிமம் புதுப்பிக்கப்படாமல் இயங்கி வருவதாக கண்டும் பிடிக்கப்பட்டு உள்ளது.
இந்த விவகாரம் குறித்து விளக்கமளிக்குமாறு மாவட்ட நிர்வாகம் கருணை இல்லத்துக்கு நோட்டிஸ் அனுப்பியது.
இந்நிலையில், கருணை இல்லத்தில் விருப்பமில்லாமல் தங்க வைக்கப்பட்டிருக்கும் முதியவர்களை அங்கீகாரம் பெற்ற அரசு காப்பகங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து சர்ச்சைக்குள்ளான கருணை இல்லத்தில் விருப்பமின்றி தங்கியுள்ளவர்களை வேறு இடத்திற்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரம் செயின்ட் ஜோசப் ஆதரவேற்றோர் முதியோர் கருணை இல்லத்தில் நிகழ்ந்த மர்ம மரணங்கள் குறித்து கோட்டாட்சியர் ராஜீ தலைமையில் 10 பேர் கொண்ட அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இல்லத்தில் உள்ள முதியோர்கள் மற்றும் ஊழியர்களிடம் தனித்தனியாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.