தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து பேசினார்.
மாநிலங்களுக்கு நிதி, கூடுதல் அதிகாரம் பெறுவது குறித்து இருவரும் ஆலோசித்தனர். தெலங்கானா மாநில முதல்வரும், தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ் நேற்று பிற்பகல் ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.
மதியம் 1.50 மணியளவில் சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி இல்லத்துக்கு வந்தார். அவரை வாசலில் திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வீட்டிற்கு அழைத்து சென்றார். சந்திரசேகர ராவ் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். அவரிடம் ஆசியும் பெற்றார்.
தொடர்ந்து அவர் 2 மணியளவில் கோபாலபுரத்தில் இருந்து அவர் பின்னர் ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு ஒரே காரில் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்துக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சந்திரசேகர ராவ் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் மதிய உணவு சாப்பிட்டார்.
பின்னர் சந்திரசேகர ராவ், மு.க.ஸ்டாலின் இருவரும் தனியாக ஆலோசனை நடத்தினர். தற்போதைய அரசியல் விவகாரம், தேசிய அரசியல் சூழ்நிலை, எதிர்வரும் காலகட்டங்களில் ஏற்படக்கூடிய அரசியல் சூழல்களை எப்படி அணுகுவது என்பது குறித்தும் பாஜவுக்கு மாற்றாக புதிய அணியை உருவாக்குவது குறித்தும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பு சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்தது. இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம்தான் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 2 மணி நேரத்திற்கும் மேலாக சந்திப்பு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திப்புக்கு பிறகு மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில் " இந்திய மதச்சார்பின்மையை காப்பாற்றுவது, மாநிலங்களுக்கான கூடுதல் உரிமைகளை பெறுவது, மாநில சுயாட்சிக்கு குரல் கொடுப்பது, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவது, மாநிலங்களுக்கான கூடுதல் நிதிப் பங்கீட்டை உரிமையோடு பெறுவது, மத்திய அரசின் சர்வாதிகார போக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து நாங்கள் நீண்ட நேரம் விவாதித்தோம். முதல்கட்டமாக இந்தப் பேச்சுவார்த்தையை நாங்கள் தொடங்கியிருந்தாலும், இவைகள் குறித்து அவ்வப்போது நாங்கள் தொடர்ந்து பேசுவது என முடிவெடுத்து இருக்கிறோம்" என அவர் கூறினார்.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அளித்த பேட்டியில் "எனது சகோதரர் ஸ்டாலினை சந்திப்பதற்காக சென்னை வந்தேன். தற்போது மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகள், மாநிலங்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், மாநில சுயாட்சி என பல விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தோம். விவசாயிகள், இளைஞர்கள் உள்ளிட்ட பிரச்னை குறித்தும் விவாதித்தோம். மதசார்பற்ற நாடாக இந்தியா இருக்க ேவண்டும். அதை நோக்கியே எங்கள் பயணம் இருக்கும். இந்த சந்திப்பு தொடக்கமும் இல்லை, முடிவும் இல்லை; தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி விவாதிப்போம். இந்திய அரசியலிலும், அரசிலும் மாற்றம் தேவை என நாடு முழுவதும் விவாதம் எழுந்துள்ளது. எனவே இதுகுறித்து மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் நாடு முழுவதும் சென்று பேசி வருகிறோம். இதற்கு அனைவரும் உடன்பட்டு வர 3 மாதங்களுக்கு மேல் ஆகும்.இந்தியா விசித்திரமான நாடு. நாட்டில் எல்ேலாரும் மதிக்கப்பட வேண்டும். ஒருவருக்கு ஒருவரை மதிக்க வேண்டும். மருத்துவம், கல்வி, விவசாயம், நகராட்சி வளர்ச்சி, கிராம வளர்ச்சி, குடிதண்ணீர் என அனைத்தையும் வழங்குவதில்மத்திய அரசு தவறியுள்ளது. மத்திய அரசு இதில் கவனம் செலுத்தி செயல்பட வேண்டும். முக்கியமாக பொருளாதாரத்தில் வளர வேண்டும். உதாரணமாக ஜப்பான் 2வது உலக போரில் பாதிக்கப்பட்டு தற்போது வளர்ந்த நாடாக உள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் மே 10ம் தேதி நடக்கும் விவசாயிகள் நலத்திட்ட விழாவிற்கு மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தேன். பெரிய மாநிலத்தின் ஆசி வேண்டும். மாநிலங்களுக்கு அதிக நிதி, கூடுதல் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பது குறித்து விவாதித்தோம். இந்த சந்திப்பு முடிவு அல்ல, யார் எல்லாம் எங்களோடு இருப்பார்கள், வெளியே செல்வார்கள் என்பதெல்லாம் வருங்காலங்களில் முடிவு எடுக்கப்படும்.3வது அணி, 4வது அணி, 5வது அணி ஏதும் இல்லை. இது உருவாக்கப்படுகிறது. யாரும் 3வது அணி என்று கூறவில்லை. இந்தியாவில் மாற்றம் கொண்டுவர விவாதித்தும் வருகிறோம். அணி அமைப்பதில் எந்த அவசரமும் இல்லை. நாட்டின் வளர்ச்சி தொடர்பான இந்த சந்திப்பை அரசியல் ஆக்க வேண்டாம். தென் மாநிலங்களுக்கான உரிமையை பெறுவோம். வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் வளர்ச்சி என அனைத்துக்காகவும் விவாதித்து வருகிறோம். சந்திரபாபு நாயுடுவையும் சந்தித்து விவாதிப்போம்" என்றார்.
சந்திரசேகர ராவ் அளித்த பேட்டியில், “தமிழகத்துக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு வருகிறேன். 2004ல் கருணாதியை சந்தித்து ஆசி பெற்றேன். அதற்கு பிறகு இன்று அவரை சந்தித்தேன். நான் கூறிய வணக்கத்தை ஏற்றுக்கொண்டதை நான் எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். அவர் எனக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினார். தென் மாநிலத்தின் குரலாக ஒலிக்கும் கருணாநிதியை சந்தித்தது பெருமை” என்றார்.