முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், அ.தி.மு.க., அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருந்த பன்னீர் செல்வம், முதல்வர் ஆனார். சசிகலாவின் நிர்ப்பந்தத்தால், பதவியை ராஜினாமா செய்தார். சசிகலா ஆதரவாளராக இருந்த பழனிசாமி, முதல்வராக பதவியேற்றார். பன்னீர்செல்வம் தலைமையில், தனி அணி இயங்கியது.
சட்டசபையில், பெரும்பான்மையை நிரூபிக்கும் படி, பழனிசாமிக்கு, கவர்னர் உத்தரவிட்டார். 2017 பிப்ரவரியில், நம்பிக்கை தீர்மானம், சட்டசபையில் கொண்டு வரப்பட்டது. முதல்வர் பழனிசாமி அரசுக்கு எதிராக, பன்னீர்செல்வம் உள்ளிட்ட, அவரின் ஆதரவு, 11 எம்.எல்.ஏ.,க்கள், ஓட்டு அளித்தனர். எனினும், பெரும்பான்மை இருந்ததால், பழனிசாமி அரசு வெற்றி பெற்றது.
பின், பழனிசாமி அணியும், பன்னீர்செல்வம் அணியும் இணைந்தன. துணை முதல்வராக பன்னீர்செல்வம், அமைச்சராக பாண்டியராஜன் நியமிக்கப்பட்டனர். இவர்கள், சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி துாக்கினர். இதனால், 18 எம்.எல்.ஏ.,க்கள், சசிகலாவுக்கு ஆதரவாக இறங்கினர். சசி ஆதரவு, 18 எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் பழனிசாமிக்கு எதிராக, கவர்னரிடம் கடிதம் கொடுத்தனர். இதையடுத்து, அரசுக்கு எதிராக செயல்படுவதாக கூறி, 18 பேரையும், தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக ஓட்டு போட்ட, பன்னீர் செல்வம் உள்ளிட்ட, 11 பேரை யும், தகுதி நீக்கம் செய்யக் கோரி, சட்டசபை, தி.மு.க., கொறடா சக்கரபாணி, உயர் நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்தார்.
சசி ஆதரவு, எம்.எல்.ஏ.,வாக இருந்த வெற்றி வேலும், 11 பேரை தகுதி நீக்கம் செய்யக் கோரி, தனியாக மனு தாக்கல் செய்தார். மனுக்களை, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்துாஸ் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' விசாரித்தது.
பன்னீர்செல்வம் தரப்பில், மூத்த வழக்கறிஞர், சி.எஸ்.வைத்தியநாதன், வழக்கறிஞர் திருமாறன் உள்ளிட்டோர் ஆஜராகினர். இவ்வழக்கில், நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சக்கரபாணி மற்றும் வெற்றிவேல் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. 'சபாநாயகருக்கு, நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியுமா என்ற பிரச்னை, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இந்த விஷயத்தில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது' என, முதல் பெஞ்ச் கூறியுள்ளது.
மேலும், சட்டசபையில் திறக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்தை அகற்றக் கோரி, தி.மு.க., எம்.எல்.ஏ., அன்பழகன் தாக்கல் செய்த மனுவையும், 'முதல் பெஞ்ச்' நேற்று தள்ளுபடி செய்தது.
'சட்டசபையில், யார் படத்தை வைக்கலாம் என்ற, நிர்வாக ரீதியான சபாநாயகர் முடிவில், நீதிமன்றம் தலையிட முடியாது' என, முதல் பெஞ்ச் உத்தரவிட்டு உள்ளது. மேலும், நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்த கூடாது எனவும், கண்டித்தது.
ஆனால் சமூகவலைதளத்தில் 22.03.18 : பாண்டிசேரி சபாநாயகர் செய்த 3 பாஜக நியமன MLAs நீக்கம் செல்லாது.
27.04.18 : தமிழ்நாடு சபாநாயகர் அதிகாரத்தில் தலையிட முடியாது. அதே ஜட்ஜ் அதே உயர்நீதிமன்றம். முன்னது போன மாசம் பின்னது இந்த மாசம் என்று தலைமை நீதிபதியை கண்டித்து பலரும் பதிவுகளிட்டு வருகின்றனர்.மேலும் இந்த தீர்ப்பு சட்டத்திற்கு புறம்பானது என பல்வேறு அரசியல் கட்சியினர் விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் தீர்ப்பு குறித்து விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார்.
மேலும் 11 எம்எல்ஏக்கள் வழக்கில் மனசாட்சிப்படி தான் தீர்ப்பு வழங்கினோம் என்றும் மனசாட்சிக்கு விரோதமாக தீர்ப்பு வழங்கவில்லை என்பது கடவுளுக்கு தெரியும் என்று அவர் கூறியுள்ளார்.
அரசியல் ஆதாயத்திற்காக விமர்சிப்பவர்கள் குறித்து கவலை இல்லை. மனசாட்சிக்கு விரோதமாக தீர்ப்பு வழங்கவில்லை என்பது கடவுளுக்கு தெரியும் என்றும் தலைமை நீதிபதி கூறியுள்ளார்.