அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளார் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை பா.ஜ.க அரசு தட்டிக்கழிக்கவே தமிழக பா.ஜ.கவினர் அரசியல் செய்து வருகின்றனர் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் குறித்து பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசுக்குத் தொடர்பு இல்லை. இது சம்பந்தமாக எந்தத் தகவலும் எங்களுக்குத் தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
நதுணைவேந்தர் நியமனத்திற்கான குழுவை அமைப்பது மட்டுமே தமிழக அரசின் பணி. அதை நாங்கள் செய்துவிட்டோம் என்று தகவல் அளித்துள்ளார். மேலும் ஆளுநர் தன்னிச்சையாக துணைவேந்தரை நியமித்துள்ளது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து காவிரி வழக்கை தமிழக அரசு ஒழுங்காக நடத்தவில்லை என தமிழிசை சௌந்தரராஜன் கூறியதற்குப் பதிலளித்த அவர், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்குத் தொடுத்து 6 வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தீர்ப்பைப் பெற்றோம். அதை அமல்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை என்று கூறியுள்ளார்.
முன்னதாக பல்வேறு கட்சிகள் ஆளுனரை கண்டித்த நிலையில் தற்போது பமக நிறுவனர் ராமதாஸ் அண்ணா பல்கலைத் துணைவேந்தரை நீக்க வலியுறுத்தி 9-ஆம் தேதி பாமக போராட்டம் நடத்தும் என்று கூறி ., மேலும் அவர் " அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு தகுதியான பலர் தமிழகத்தில் இருக்கும் போது அவர்களை புறந்தள்ளிவிட்டு, இல்லாத தகுதியை இருப்பதாகக் காட்டி ஒரு கன்னடரை தமிழகத்தின் பெருமைக்குரிய உயர்கல்வி நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் திணிப்பதை மன்னிக்கவே முடியாது.
இத்தகைய தருணங்களில் முதல் எதிர்ப்பு தமிழக முதலமைச்சரிடம் இருந்து வந்திருக்க வேண்டும். ஆனால், எந்த எதிர்ப்பும் வரவில்லை. மாறாக, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்கும், தமிழக அரசுக்கும் எந்த அதிகாரமும் கிடையாது என்று கூறி தமிழக அரசு ஒதுங்கிக் கொண்டது. பெரியளவில் எந்த அதிகாரமும் இல்லாத யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் கூட தங்களின் அதிகார வரம்பில் ஆளுனர்கள் குறுக்கிட்டால் அதை எதிர்த்து உயர்நீதிமன்றங்களுக்கு செல்கின்றனர். ஆனால், நமது முதல்வர் ஆளுனரிடம் சரணாகதி அடைந்து விடுகிறார். இது அவமானம்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டதை ரத்து செய்து அவரை கர்நாடகத்துக்கு திருப்பி அனுப்ப வேண்டும். தகுதியுள்ள தமிழர் ஒருவரை புதிய துணைவேந்தராக நியமிக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டாளி மாணவர் சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நாளை மறுநாள் (09.04.2018) திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு எனது தலைமையில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறவுள்ளது என்றும் கூறியுள்ளார்