முதல்வர் எடப்பாடி பழனிசாமி சம்மதத்துடனேயே துணை வேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நேற்று ஆளுநரை முதல்வர் எடப்பாடி, ஓபிஎஸ் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். ஆளுநருடனான சந்திப்பின்போது சூரப்பா நியமனத்திற்கு எடப்பாடி சம்மதம் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தைச் சேர்ந்த எம்.கே.சூரப்பா அண்ணா பல்கலைகழக துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். துணை வேந்தராக சூரப்பாவை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் பணியாற்றி சூரப்பா ஓய்வு பெற்றவர். சூரப்பா நியமிக்கப்பட்ட உள்ளதாக வெளியான தகவலால் அண்ணா பல்கலைகழக பேராசிரியர்கள் கொந்தளித்துள்ளனர். அண்ணா பல்கலைகழக துணை வேந்தராக சூரப்பா 3 ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார். பஞ்சாபின் ஐஐடி இயக்குநராகவும் இருந்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சூரப்பா துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் பதவிககு 8 பேர் பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டது. 8 பேரில் இருந்து மூவரை தேர்வு செய்ய ஆளுநருக்கு தேர்வு குழு அனுப்பியது. 3 பேரில் ஒருவரை துணை வேந்தராக நியமிப்பது ஆளுநரின் கடமையாகும். இதனையடுத்து சூரப்பாவை தேர்வு செய்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தின் தன்மானத்தின் மீது தாக்குதல் நடத்தும் வகையில் , குறிப்பாக காவிரிப் பிரச்சினை கொளுந்து விட்டு எரிகின்ற நேரத்தில், தமிழகமே போர்க்கோலம் பூண்டிருக்கும் தருணத்தில்,கர்நாடக மாநிலத்தைச்சேர்ந்த திரு எம்.கே. சூரப்பா என்பவரை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமித்திருக்கும் மாண்புமிகு தமிழக ஆளுநரின் செயல் ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.
தேடுதல் குழுவின்( search committee) கால அவகாசத்தை இன்று நீட்டித்த கையோடு அவசரம் அவசரமாகச் செய்யப்பட்டுள்ள இந்த நியமனத்தை, கர்நாடக மாநிலத் தேர்தலுடன் இணைத்துப் பார்ப்பதற்கான வாய்ப்பை ஒதுக்கிவிட முடியாது.
மண்ணின் மைந்தர்களாக இருக்கும் கல்வியாளர்களையும் அறிஞர்களையும் இழிவுசெய்யும் உள்நோக்கத்துடன் வெளி மாநிலங்களில் இருந்து வரிசையாக துணை வேந்தர் பதவிகளுக்கு இறக்குமதி செய்து தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகங்களை "காவி" மயமாக்க வேண்டாம் என்று மாண்புமிகு ஆளுநர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். என்று திமுக செயல் தலைவர் கூறி உள்ளார்.
கர்நாடகத்தைச் சேர்ந்த எம்.கே.சூரப்பா அண்ணா பல்கலைகழக துணை வேந்தராக நியமிக்கப்பட்டதற்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள உயர்கல்வியை பிற மாநில கல்வியாளர்களிடம் ஒப்படைக்ககூடாது என்று அவர் தெரிவித்துள்ளார். நிர்வாக திறன் கொண்ட கல்வியாளர்கள் தமிழகத்தில் இல்லையா என்று அனபுமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணா பல்கலைகழக, துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டது தமிழகத்திற்கே தலைகுனிவு என்று கி.வீரமணி கூறியுள்ளார். கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டிருப்பது மாநில உரிமை பறிப்பு மற்றும் சமூக அநீதியானது என்று திக தலைவர் கி.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.
ஏற்கனவே இசை பல்கலை துணை வேந்தராக இருப்பவர் கேரளாவை சேர்ந்த பிரமீளா குருமூர்த்தி, மேலும் சென்னை அம்பேத்கர் சட்டப்பல்கலை துணை வேந்தர் ஆந்திராவின் சூரியநாராயண சாஸ்திரி சில நாட்களுக்கு முன்னதாக நியமிக்கப்பட்டார். தற்போது கர்நாடகத்தை சேர்ந்த சூரப்பாவுக்கு அண்ணா பல்கலைகழக துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
துணை வேந்தர் பதவிக்கு தகுதியானவர்கள் தமிழகத்தில் இல்லையா? என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் பல்வேறு தரப்பில் இருந்து எதிரிப்புகள் வந்தவண்ணமுள்ளது.