காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த பிப்ரவரி 16-ந் தேதி இறுதித் தீர்ப்பை வழங்கியது.
நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நிறைவேற்ற, 'ஸ்கீம்' (செயல்திட்டம்) ஒன்றை 6 வார காலத்துக்குள் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் விதித்திருந்த காலக்கெடு முடிவடைந்ததையடுத்து, மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடுத்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சனிக்கிழமை மனு தாக்கல் செய்தது. அதில், 'குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது குறித்து எவ்வித உறுதியான நடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை.
இது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வேண்டுமென்றே மத்திய அரசு அவமதிப்பதை எடுத்துக் காட்டுகிறது. எனவே, மத்திய அரசின் அமைச்சரவைச் செயலாளர் பி.கே. சின்ஹா, மத்திய நீர்வளத் துறை செயலாளர் யு.பி. சிங் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்க எதிர் மனுதாரர்களுக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரப்பட்டிருந்தது.
இதற்கிடையே, காவிரி இறுதி தீர்ப்பை அமல்படுத்த 3 மாதம் அவகாசம் கோரியும், தீர்ப்பில் தெரிவித்த 'ஸ்கீம்' (செயல்திட்டம்) என்ற வார்த்தைக்கு விளக்கம் கோரியும் மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சனிக்கிழமை காலை மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர் ஜி. உமாபதி திங்கள்கிழமை ஆஜராகி, 'காவிரி இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் நீதிமன்றத்தை மத்திய அரசு அவமதித்துள்ளது' என்று கூறினார்.
இதையடுத்து, குறுக்கிட்ட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, 'செயல்திட்டம் (ஸ்கீம்) என்பதை காவிரி மேலாண்மை வாரியம் என்ற பொருளில் கூறுகிறீர்களா?' என வினவினார். அதற்கு உமாபதி, 'செயல்திட்டத்தின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றை நீதிமன்றம் தெரிவித்தபடி 6 வாரங்களுக்குள் உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு உருவாக்கவில்லை' என்றார்.
இதற்குத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, 'செயல்திட்டம் (ஸ்கீம்) என்பது (காவிரி மேலாண்மை) வாரியம் என்று மட்டும் பொருள் கொள்ள முடியாது. காவிரிப் பிரச்னைக்கு தீர்வுகாண அனைத்து அம்சங்களும் தீர்ப்பில் அளிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் பிரச்னைகளை நீதிமன்றம் புரிந்து கொண்டுள்ளது. பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டு, தமிழகத்துக்கு உரிய நீர் கிடைப்பதை உறுதி செய்வோம்' என்றார். முன்னதாக, தமிழக முதல்வரின் செயலாளர் எம். சாய் குமார், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் ஆர். சுப்ரமணியன் ஆகியோர் உச்ச நீதிமன்றதுக்கு வந்திருந்தனர்.
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, ஏப்ரல் 9-ம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இந்த வழக்கின் விசாரணையின்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஜி. உமாபதி, ' தமிழக அரசின் அவமதிப்பு வழக்கை இந்த வாரத்திலேயே விசாரிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். அதற்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, 'இந்த வழக்கை ஏப்ரல் 9-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம்' என்றார்.
காவிரி இறுதி தீர்ப்பை அமல்படுத்த 3 மாதம் அவகாசம் கோரியும், (ஸ்கீம்) செயல்திட்டம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக மத்திய அரசு சார்பில் திங்கள்கிழமை யாரும் வரவில்லை.
இருப்பினும், இந்த மனுவையும் ஏப்ரல் 9-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரி விஷயத்தில் தமிழகத்தின் தொடரும் போரட்டம் சட்டம்-ஒழுங்கு பிரச்னை, மேலும் விவரம் அறிய...