பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் அமீர்கான், யாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் கேஜிஎப்-2 (KGF-2) படக்குழுவினரிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.

1994ஆம் ஆண்டு வெளியாக ‘ஃபாரஸ்ட் கம்ப்’ என்ற ஹாலிவுட் படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இப்படத்தில் நடிகர் அமீர்கான், கரீனா கபூர் மற்றும் நாக சைதன்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ‘லால் சிங் சட்டா’ என பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் ஏப்ரல் 14ஆம் தேதி நான்கு மொழியில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘லால் சிங் சட்டா’ படக்குழுவின் இந்த அறிவிப்பால் KGF 2 படக்குழு அதிருப்தியடைந்துள்ளது. காரணம் ஒரே தேதியில் ஏப்ரல் 14 ஆம் தேதி இரண்டு படங்களும் வெளியாவதால் வசூல் பாதிக்கும் என்று KGF 2 படக்குழு நினைத்துள்ளது.

மேலும், வட இந்தியாவில் KGF 2 படத்திற்குக் குறைவான திரையரங்குகள் கிடைக்கும் என்பதால் அவர்கள் நடிகர் அமீர்கான் மீது அதிருப்தியடைந்துள்ளனர். இதனையடுத்து KGF-2 படக்குழு மற்றும் படத்தின் நாயகன் யாஷ் ஆகியோருக்கு நடிகர் அமீர்கான் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து நடிகர் அமீர்கான் கூறுகையில், “நான் வேறொருவரின் எல்லைக்குள் அத்துமீறி நுழைகிறேன் என்பதை வெறுக்கிறேன். ஆனால் எனது சினிமா வாழக்கையில் முதல் முறையாகச் சீக்கியனாக நடிக்கிறேன்.

மேலும், லால் சிங் சட்டா படத்தை ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிடுவது மிகவும் பொருத்தமாக இருக்கும் எனக் கூறி அவர்களிடம் மன்னிப்பு கேட்டேன். கொரோனா ஊரடங்கால் தயாரிப்பு வேலைகள் எப்படிப் பாதிக்கப்பட்டது என்பது குறித்தும் KGF-2 படக்குழுவினரிடம் எடுத்துக் கூறினேன்.

அவர்கள் எனது நிலையைப் புரிந்து கொண்டனர். பின்னர் உங்கள் படமும் வெளியிடுவதில் மகிழ்ச்சி எனத் தெரிவித்தனர். KGF-2 படக்குழுவின் இந்த நல்ல குணம் என்னை மிகவும் கவர்ந்தது. எனது திட்டத்திற்கு அவர்கள் உறுதுணையாக இருந்தனர். எங்களின் இரண்டு படத்தையும் மக்கள் பார்த்துப் பாராட்டுவார்கள். படத்தின் வசூல் பாதிக்காது” எனத் தெரிவித்துள்ளார்.